News

Sunday, 14 November 2021 06:14 PM , by: R. Balakrishnan

Noro virus in kerala

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் குறைந்தது 13 பேர் நோரோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு வைத்திரி அருகே பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு முதன்முதலாகத் தொற்று இருப்பது உறுதியானது.

வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென மாநில சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

நோரோ வைரஸ்

நோரோ வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது. இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் ரோடாே வைரஸ் போன்றது ஆகும். இந்த நோய் பெரும்பாலும் கப்பல் பயணம், முதியோர் இல்லங்கள், தங்குமிடங்கள் மற்றும் பிற மூடிய இடங்களில் பரவுவதாகக் கூறப்படுகிறது.

அறிகுறிகள்

நோரோ வைரஸின் அறிகுறிகள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகும். இந்த அறிகுறிகள், நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒன்று அல்லது இரண்டு நாள்களில் தென்படும்.

மேலும், வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் வலி போன்ற பாதிப்புகளும் ஏற்படும். நோய் பாதிப்பு தீவிரமடையும் பட்சத்தில், உடலில் நீரிழப்பு அபாயம் ஏற்படுகிறது.

சிகிச்சை முறைகள்

இந்த வைரஸ் பாதிப்பு ஓரிரு நாளில் தானாகவே சரியாகக்கூடியது. நோய் பாதிப்பு கடுமையாக இருந்தாலும், அதன் தாக்கம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே நீடிக்கும். இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் சரியான ஓய்வுடன் நீரேற்றத்தைப் பராமரிப்பது மூலம் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம்

எப்படி பரவுகிறது

நோரோ வைரஸ் அசுத்தமான உணவு, நீர் மற்றும் மேற்பரப்புகள் மூலம் பரவுகிறது. இதில் முக்கியமானது, நோய் பாதிப்பு இருப்பவர்களிடம் பேசுகையில் எளிதாக வாய்வழியாக பரவுகிறது.

வைரஸ் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருப்பதால், ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். நோரோ வைரஸ் கிருமிநாசினி மற்றும் 60 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலையைத் தாங்கும். எனவே, சூடான உணவுகள் மற்றும் குளோரின் வாட்டரால் வைரஸை அழிக்க முடியாது. வைரஸ் அனைத்து சானிடைசர்களிலும் உயிர்பிழைக்கும் தன்மை கொண்டது.

நோரோ வைரஸின் வரலாறு

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இரைப்பை குடல் நோய் (வயிறு மற்றும் குடல் அழற்சி) பாதிப்பால் ஏற்படும் பொதுவான வைரஸாகும்.

உலகளவில் கடுமையான இரைப்பை குடல் அழற்சி பாதிப்பால் அவதிப்படும் ஐந்து பேரில் ஒருவருக்கு நோரோ வைரஸ் தென்படுகிறது என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மதிப்பிடுகின்றன.

ஆண்டுதோறும் 685 மில்லியன் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றில் 200 மில்லியன் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே கண்டறியப்படுகிறது. வைரஸால் ஏற்படும் வயிற்றுப்போக்கு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 50,000 குழந்தைகள் இறக்கின்றனர்.

நோரோ வைரஸ் தடுப்பது எப்படி

கழிவறையைப் பயன்படுத்திய பிறகு மற்றும் டயப்பர்களை மாற்றிய பிறகு சோப்பு போட்டு மீண்டும் கை கழுவ வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன் அல்லது உணவு தயாரிக்கும் முன்பு கைகளை கழுவுவது அவசியமாகும்.

நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஹைபோகுளோரைட்டின் கரைசலைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

 

நோய்க்கான தடுப்பூசிகள் எதுவும் இல்லை.

நோய் பாதிப்பின்போது நீரேற்றத்தைப் பராமரிப்பது அவசியமாகும்.

நோய் பாதிப்பின் கடுமையான நேரத்தில், நோயாளிகளுக்கு ரீஹைட்ரேஷன் திரவங்களை நரம்பு வழியாக செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

மேலும் படிக்க

பொதுமக்கள் சுடு தண்ணீரை குடிக்க வேண்டும்: அரசு வேண்டுகோள்
மழைக்கால மின் விபத்துகளைத் தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)