கொரோனா தொற்று பரவல் வேகத்தை தடுக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தக் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமுலுக்கு வருகின்றன. வழிபாட்டுத் தலங்களில், பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. ஓட்டல்கள், டீ கடைகளில், 'பார்சல்' சேவைக்கு மட்டுமே அனுமதி' என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை, தமிழக அரசு நேற்று அறிவித்தது.
புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில், கொரோனா (Corona) தொற்றை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், பொது இடங்களில், மக்கள் முக கவசம் (Mask) அணியாதது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது போன்ற காரணங்களால், நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது. நோய் தொற்று வேகமாக பரவி வருவதாலும், பொதுமக்கள் நலன் கருதியும், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன், நாளை அதிகாலை, 4:00 மணி முதல், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன.
- அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை
- பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை.
- மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும், உரிய வழிமுறைகளை பின்பற்றி, வழக்கம் போல செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் இயங்கும், பல சரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. தனியாக செயல்படும், மளிகை உட்பட பல சரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள், 'ஏசி' வசதியின்றி இயங்கலாம். இவற்றில், ஒரே சமயத்தில், 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்
- சென்னை மாநகராட்சி உட்பட, அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலுான்கள் இயங்க அனுமதி கிடையாது
பார்சல் மட்டும்
- அனைத்து உணவகங்கள் மற்றும் டீ கடைகளில், பார்சல் சேவை (Parcel Service) மட்டும் அனுமதிக்கப்படும். அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே, உணவு வழங்க வேண்டும்
- அனைத்து மின் வணிக சேவைகள், வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்
வழிபாடு
- அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடக்கும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் வழியே நடத்த தடையில்லை
- மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு நடத்த ஏற்கனவே, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனரிடம், அனுமதி பெற்றிருந்தாலோ, தேதி நிர்ணயம் செய்து, முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, 50 பேர் பங்கேற்புடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்படுகிறது. பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோவில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்று, குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக குடமுழுக்கு, திருவிழா நடத்த, அனுமதி இல்லை.
50 பேருக்கே அனுமதி
- திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில், 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
- இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில், 25 பேருக்கு மேல் பங்கேற்ககூடாது
- தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில், 50 சதவீத பணியாளர்கள், கண்டிப்பாக வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்
- கோல்ப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட, அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்
'இ - பாஸ்' கட்டாயம்
- புதுச்சேரி தவிர்த்து, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட, அனைத்து மாநிலங்களில் இருந்தும், தமிழகம் வருவோர், http://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்த விபரத்தை, தமிழகத்திற்குள் நுழையும் போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர். தமிழகத்திற்கு விமானம் மற்றும் கப்பலில் வருவோரும், இணையதளத்தில் பதிவு செய்த விபரத்தை, காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.
- ஏற்கனவே அறிவித்தபடி, தனியார் மற்றும் அரசு பஸ்களில், இருக்கைகளில் மட்டும் பயணியர் அமர்ந்து பயணம் செய்யலாம். நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.
- வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில், டிரைவர் தவிர்த்து மூன்று பேர்; ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து இருவர் மட்டும் பயணிக்கலாம். இதை மீறுவோர் மீது, உரிய நடவடிக்கைஎடுக்கப்படும்
ஞாயிறு முழு ஊரங்கு
- தமிழகத்தில், இரவு நேர ஊரடங்கு (Night Lockdown) மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு, தொடர்ந்து அமலில் இருக்கும்
- பணிக்கு செல்லும் பணியாளர்கள், பணிக்கு சென்று வருகையில், தங்கள் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டையை, தவறாமல் அணிந்து செல்ல வேண்டும்
- அனைத்து தொழில் நிறுவனங்களும், அரசு வெளியிட்டுள்ள, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்பட வேண்டும்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
- பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம்.
- வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும், அடிக்கடி சோப்பால் கை கழுவ வேண்டும்.
- அவசிய தேவை இல்லாமல், வெளியில் செல்வதை தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் தான், இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும்
- நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டதும், பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற வேண்டும். அரசின் முயற்சிகளுக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.
மேலும் படிக்க
கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!
தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!