தமிழகத்தில் கொரோனா பரவல், 1 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள தடுப்பூசிகள் சேமிப்பு கிடங்குகளில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தடுப்பூசி
பின், செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழகத்தில் முதல் முறையாக, 21 லட்சம் தடுப்பூசிகள் (Vaccine) கையிருப்பில் உள்ளன. இதுவரை, 2.70 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் தவணைக்கான அவகாசம் முடிந்தும், 10 லட்சம் பேர் கோவிஷீல்டு; 3.5 லட்சம் பேர் கோவாக்சின் (Covaxine) தடுப்பூசியை செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைந்து உள்ளது. அதிக தடுப்பூசி கையிருப்பில் இருப்பதால், மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்.
சென்னை, கோவை, தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு போன்ற 17 மாவட்டங்களில், 1 சதவீதத்துக்கு மேல் தொற்று பரவல் உள்ளது. ஆனால், மாநில சராசரியில், 1 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொற்று குறைகிறது என மக்கள் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம்.
பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், ''பள்ளிகள் திறப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பள்ளி கல்வித் துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்,'' என்றார்.
வீடுகளுக்கே தடுப்பூசி
சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்த 044-2538 4520, 044-4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க
இரு டோஸ் தடுப்பூசி செலுத்தினால் உயிரிழப்பு குறைகிறது: ஆய்வில் தகவல்!
நரம்பு மண்டலத்தை பாதிக்குமா கொரோனா வைரஸ்? மருத்துவர் விளக்கம்!