தமிழகத்தில் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கொரோனோ சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை அரசு நிர்ணயித்தது.
இதன் தொடர்ச்சியாக, கொரோனா சிகிச்சையும், முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன்படி அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் தனியார் மருத்துவமனைகளில் இந்த கொரோனாவிற்கு சிகிச்சை பெற முடியும். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கொரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொரோனா சிகிச்சைக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்க வேண்டிய தொகுப்பு கட்டணங்கள் குறித்து மக்கள் நல்வாழ்வு துறைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக்குழு தனியார் மருத்துவமனைக்கு தமிழக அரசால் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும் ஒரு சில நிபந்தனைகளுடன் கூடிய தனது அறிக்கையை அளித்தது. அதனடிப்படையில் கீழ்கண்ட கட்டணங்களை நிர்ணயித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் விபரம்
-
பொது வார்டில் (Ward) அனுமதிக்கப்பட்டோர், அறிகுறிகள் இல்லாதோர் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு அதிகபட்ச தொகுப்பு கட்டணமாக 5,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கான கட்டணம் கிரேடு ஏ1, ஏ2 – ரூ. 10,000 முதல்- 15,000 ரூபாய் வரையும், கிரேடு ஏ3, ஏ4 – ரூ. 9000 முதல் – ரூ. 13,500 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
-
அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தை முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.
-
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
-
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகத் தொகை செலுத்துமாறு நிர்பந்திக்கும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
-
மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
-
மேலும் கடந்த 2012ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான முதலமைச்சரின் மருத்துவக்காப்பீடு திட்டம் மேலும் ஓராண்டு, அதாவது 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.
-
இந்த புதிய அறிவிப்பு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்து பயன் பெறத் தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும்.
-
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை 4 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
அதேநேரத்தில் புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவியானது 7.50 லட்ச ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Elavarase Sivakumar
Krishi jagran
Related link ..
மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து - தமிழக முதல்வர் அறிவிப்பு
வென்டிலேட்டர்கள் தயாரிக்க பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.2000 கோடி ஒதுக்கீடு!!