தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில், மும்பை டெல்லி தமிழகம் ஆகிய மாநிலங்கள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் தொடர்ந்து தினம் தினம் ஒரு உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் கடந்த 25ந்தேதி 3,509 பேருக்கும், கடந்த 26ந்தேதி 3,645 பேருக்கும், 27ம் தேதி 3,713 பேருக்கும் என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிக பரிசோதனை (More Test in Tamil Nadu)
இந்தியாவிலேயே அதிக அளவில் கொரோனா பரிசோதனை தமிழகத்தில்தான் நடைபெறுவதாக தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் சமூக தொற்று கிடையாது என்று தெரிவித்துள்ளார். கொரோனா சிகிச்சைக்காக இரண்டு புதிய மருந்துகள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், உரிய விதிமுறைகளின்படி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அவற்றை வழங்குவார்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
புதிய மருந்து பரிந்துரை (Dexamethasone to treat the covid-19)
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு மேலும் ஒரு புதிய மருந்தை மத்திய சுகாதார துறை சேர்த்துள்ளது. இந்த மருந்தின் பெயர், டெக்ஸாமெத்தாசோன் (Dexamethasone). இந்த மருந்து குறைந்த விலையில் கிடைக்கிறது. மிதமான மற்றும் நோய் தீவிரமான நிலையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக்ஸாமெத்தாசோன் பயன்கள் (Dexamethasone Benefits)
கொரோனா தொற்று சிகிச்சையில் டெக்ஸாமெத்தாசோன் மருந்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்த சான்றுகளை ஆராய்ந்தும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற்று பரிசீலித்தும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் கூறி உள்ளது.
கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகள்படி, கொரோனா வைரஸ் தொற்றின் மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு மெத்தில்பிரிட்னிசோலோன் மருந்து அரை மில்லிகிராம் முதல் 1 மில்லிகிராம் வரையிலும் தரலாம் அல்லது டெக்ஸாமெத்தாசோன் 0.1 மில்லிகிராம் முதல் 0.2 மில்லிகிராம் வரையில் 3 நாட்களுக்கு தரலாம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 48 மணி நேரத்தில் இந்த மருந்தினை தரலாம். ஆக்சிஜன் தேவை அதிகரித்தாலும் இந்த மருந்தை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோயாளிகள் சுவாச பிரச்சைகளால் அவதிப்பட்டு வென்டிலேட்டரில் வைக்கிற தேவை இருப்பின், ஏற்கனவே கொடுக்கப்படாத நிலையில், ஒரு நாளுக்கு மெத்தில்பிரிட்னிசோலோன் மருந்து 1 மில்லிகிராம் முதல் 2 மில்லிகிராம் வரையிலும் தரலாம் அல்லது டெக்ஸாமெத்தாசோன் 0.2 மில்லிகிராம் முதல் 0.4 மில்லிகிராம் வரையில் தரலாம். இரு பிரிக்கப்பட்ட அளவுகளில் இந்த மருந்தை 5 முதல் 7 நாட்களுக்கு தரலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.
முதல்வர் இன்று ஆலோசனை (TN CM Holds meeting Today)
இந்நிலையியல், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகத்தில் அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடை கிறது. ஊரடங்கு குறித்து மத்திய அரசு அறிவிக்காத நிலையில், ஏற்கனவே கொரோனா தொற்று உள்ள மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஜூலை 31 வரை ஊரடங்கை நீடித்து அந்த அந்த மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன
தமிழகத்திலும் கொரொனா தொற்று குறையாத நிலையில், சென்னையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க..
பணம் இல்லாத போதும், ரூ.5 ஆயிரம் எடுக்க உதவும் ஜன் தன் அக்கவுன்ட்!!
தலைநகரை முகாமிட்ட பாலைவன வெட்டுக்கிளிகள்!!