இந்த ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு கேண்டி(355 கிலோ) பருத்தியின் விலை ரூபாய் ₹75,000 ஐ எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் ஏற்படும் பருத்தியின் தேவை மற்றும் நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தி குறைந்ததன் விளைவாக விலையேற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பருத்தி சங்கத்தின் தலைவர் அதுல் கனாத்ரா கூறுகையில், தற்போது பருத்தி விலை கேண்டி ஒன்றுக்கு ₹62,500–63,000 வரை வர்த்தகம் செய்யப்படுகிறது மற்றும் வரத்து குறைந்து வருவதால் வரும் நாட்களில் விலையானது சீராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பருத்தி விலை ஜூன்-ஜூலை மாதங்களில் ஒரு கேண்டி(355 கிலோ) ₹70,000-75,000 ரூபாயினைத் தொடும் என்றார்.
கடந்த ஆண்டு, இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி 42 லட்சம் பேல்களாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது சுமார் 30 லட்சம் பேல்களாக குறையும். உள்நாட்டு விலை உயர்வால் ஏற்றுமதியானது 25 லட்சம் பேல்களாக கூட குறைய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பருத்தி ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு பருத்தி விலையை உயர்த்துவதற்கான மற்றொரு காரணியாகும். ஆனாலும், மார்ச் வரை, இந்தியா 1.2 மில்லியன் பேல் பருத்தியை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கெடியா கமாடிட்டிஸ் இயக்குனர் அஜய் குமார் கூறியதாவது: தற்போது நூற்பாலைகள் முழு அளவில் இயங்கி லாபத்தில் உள்ளன. சீனா மற்றும் வங்காளதேசத்தில் நூற்பாலைகள் மந்தமாக இருக்கும் போது தேவை இந்தியாவிற்கு மாறுவதால், இந்திய நூற்பு ஆலைகளின் எதிர்காலம் பிரகாசமாக தோன்றுகிறது.
அதிக இடுபொருள் செலவுகள் மற்றும் பிற பயிர்களின் தேவை காரணமாக பருத்தி பயிரிடப்பட்ட பரப்பளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை முறைகளில் ஏற்படும் மாற்றங்களும் பாதிப்பை உண்டாக்க வாய்ப்புள்ளது.குறிப்பாக மேற்கு டெக்சாஸில் நிலைமைகள் மிகவும் வறண்டதாக இருக்கும் என்று குமார் கூறினார். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி இந்தாண்டின் நடுத்தர காலத்தில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவில், இந்தியாவில் பருத்தி விலை வரும் காலங்களில் ரூ.75,000 என்ற அளவை எட்டக்கூடும் என்றும் நினைக்கிறோம். எவ்வாறாயினும், வரவிருக்கும் மாதங்களில் பருத்தியின் தேவையினை பொறுத்தே விலை எவ்வாறு நகர்கிறது என்பதை தீர்மானிக்க இயலும் என்றார்.
ஜவுளித்துறை சீராக இயங்க தடையில்லாமல் உற்பத்தி நடைபெற வேண்டும். பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் ஜவுளித்துறையே முடங்கிவிடும் நிலை உள்ளது. ஏற்கனவே பருத்தி உற்பத்தி குறைய ஆரம்பித்துவிட்ட நிலையில், நூற்பாலைகளில் நேரடியாகவும், அதனை சார்ந்து ஜவுளி சங்கிலியில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
மேலும் காண்க:
தமிழக அரசின் பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் விருது வென்றவர்களின் முழு விவரம்