தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 3 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மார்ச் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் (NADCP) கீழ் 2023 மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி கரூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் பசு மற்றும் எருமைகளுக்கு போடப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த 1 ஆம் தேதி கரூர் மாவட்டம் புலியூர் காளிபாளையம் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் பசு மற்றும் எருமையினங்களுக்கு மூன்றாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். அதன் பின் கால்நடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுங்களை வழங்கி கால்நடைகளுக்கு தாது உப்புகளையும் வழங்கினார்.
இப்பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்நோய்க்கான தடுப்பூசி (Vaccine) அதற்கென உருவாக்கப்பட்ட குளிரூட்டும் அறையில் (Walk-in-Cooler) சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் இதற்கென 75 தடுப்பூசி குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர் மூலம் அனைத்து பசுவினம் மற்றும் எருமையின கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 100 சதவீத கால்நடைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோமாரி நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளின் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளினால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம், பால் கறப்போர், தீவனம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.
எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 3 மாதத்திற்கு மேற்பட்ட அனைத்து கன்றுகளுக்கும் வருகிற மார்ச் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விடுபட்ட கால்நடைகளுக்கு 2023 மார்ச் 22 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி முடிய தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியினை தவறாமல் போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ.ப., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
மகளிர் தினம்- பெண்களுக்கு சிறப்பு தற்காலிக விடுமுறை அளிக்க அரசு உத்தரவு