பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் ஒன்று அட்டகாமா அகழி (Atacama Trench) இருள் சூழ்ந்த பகுதியில் மூன்று விநோதமான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச ஆராய்ச்சிக் குழு தென்கிழக்கு பசிபிக் பகுதியில் தூண்டிலுடன் இணைக்கப்பட்ட கேமராவைப் பயன்படுத்தி இன்னும் அறியப்படாத பல மர்மங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
கடும் குளிர் மற்றும் 1500 மீட்டர் (கிட்டத்தட்ட 24,606 அடி) ஆழத்தினால் ஏற்படும் அழுத்தம் ஆகியவற்றைக் கடந்து அறிவியல் அறிஞர்கள் அட்டகாமா அகழியில் உயிரினங்கள் வாழ்ந்து வருவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கடல் நத்தை உள்ளிட்ட உயிரினங்கள் மென்மையான மற்றும் ஒளிகசியும் உடலமைப்போடு இருப்பதை தங்கள் கேமரா உதவியுடன் உறுதி செய்துள்ளனர்.
ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற நியூகாஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் தாமஸ் லின்லே ``அகழியின் ஆழத்தில் வாழும் கடல்நத்தைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றன. ஆய்வு செய்யப்பட்ட கேமரா பதிவுகளிலிருந்து ஏராளமான முதுகெலும்பற்ற உயிரினங்கள் அகழியில் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றில் கடல் நத்தைகள் அதிக சுறுசுறுப்புடனும் அதிக ஊட்டத்துடனும் காணப்பட்டன” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் ``அவற்றின் ஜெல்லி போன்ற உடலமைப்பு கடும் குளிர் மற்றும் அதிகபட்ச அழுத்தத்தை எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு தகவமைக்கப் பட்டுள்ளது. கடல்நத்தைகளின் உடலில் உள்ள கடினமான பகுதியான பல் மற்றும் உட்செவியின் எலும்பு மட்டுமே அவற்றின் சமநிலைக்கு உதவுகின்றன. கடல் நத்தைகளை கடும் குளிர் மற்றும் அதிக அழுத்தம் இல்லாத பரப்புக்கு எடுத்து வந்தால் அவை எளிதில் உடைந்து விடும் அல்லது வேகமாக உருகிவிடும்” என்று தெரிவித்தார்.
ஆய்வுக்குழு அந்தப் புதிய உயரினத்துக்கு ``வெண்சிவப்பு, நீலம், கருஞ்சிவப்பு அட்டகாமா கடல்நத்தை” (Rose, the blue, the purple atacamasnailfish) என்று செல்லப்பெயர் வைத்துள்ளது. நூறு மணிநேர வீடியோ பதிவுகள், 11,468 புகைப்படங்கள் எனப் பலவற்றை ஆய்வுசெய்து புதிய உயிரினத்தைக் கண்டறிந்துள்ளது ஆய்வுக்குழு.
அறிவியல் அறிஞர்கள் ஒரு கடல்நத்தையை பொறி வைத்துப் பிடித்து வந்து பாதுகாத்து தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். நியூகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தரையிறங்கும் பொறியுடன் கூடிய அமைப்பைப் பயன்படுத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிக ஆழப் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் ஆய்வாளர்கள்.
கடல்சார் அறிஞர்கள் தங்கள் துறை சார்ந்த புதிய ஆராய்ச்சிகள் பற்றி விவாதிக்கும் சேலஞ்சர் கருத்தரங்கம் (Challenger conference) நியூகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. அங்கு அட்டகாமா அகழியில் கண்டறியப்பட்ட இந்தப் புதிய உயிரினங்கள் பற்றியும் விவாதிக்க உள்ளனர்.