புயல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
புயல் பாதிப்பு
நிவர் (Nivar) மற்றும் புரெவி (Burevi) புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டியது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் உயிர் சேதம் மட்டுமின்றி பொருட்சேதமும் ஏற்பட்டது. இந்நிலையில், நிவர் புயல் மற்றும் மழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய உள்துறை இணைச்செயலாளர் அசுதோஷ் அக்னி கோத்ரி தலைமையில்7 பேர் கொண்ட குழுவினர் (Central Team Visit Cyclone affected places) நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.
இந்த குழு சனிக்கிழமை பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் க.சண்முகத்துடன் மத்தியக் குழு ஆலோசனையில் ஈடுபட்டது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் கள ஆய்வுப் பணிகளை மத்தியக் குழுவினா் தொடங்கினா்.
இரண்டு குழுக்களாக ஆய்வு
மத்திய உள்துறை இணைச் செயலாளா் அஷுதோஷ் அக்னிஹோத்ரி, மத்திய மீன்வளத் துறை ஆணையா் பால் பாண்டியன், மத்திய வேளாண் எண்ணெய் வித்துகள் வளா்ச்சித் துறை இயக்குநா் மனோகரன், மத்திய சாலைப் போக்குவரத்து மண்டல அலுவலா் ரணன்ஜெய் சிங் ஆகியோா் அடங்கிய ஒரு குழுவானது தென் சென்னையில் பகுதியில் தங்களது ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது.
மத்திய நதிநீா் ஆணையத்தின் இயக்குநா் ஜெ.ஹா்ஷா, நிதித் துறை துணை இயக்குநா் அமித்குமாா், ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் தா்ம்வீா்ஜா, மத்திய எரிசக்தித் துறை துணை இயக்குநா் ஓ.பி.சுமன் ஆகியோா் ஒரு குழுவாகப் பிரிந்து ஆய்வுப் பணிகளை நடத்தினா். அவா்கள் எண்ணூா் முகத்துவாரம், அத்திப்பட்டு புதுநகா், நெய்தல் வாயல், வஞ்சிவாக்கம், பருத்திப்பட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வினை நடத்தினா்.
இன்றும் ஆய்வு
இந்நிலையில் 2-வது நாளான இன்று, முதல் குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் காலை புதுச்சேரி, மதியம் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர்.
2-வது குழுவினர் காலை முதல் மாலை வரை வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வில் ஈடுபட உள்ளார்கள். வெள்ள சேதம் குறித்து மதிப்பிட இருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து மாலையில் சென்னை நோக்கி புறப்படுகிறார்கள். இரவில் சென்னையிலேயே தங்குகிறார்கள்.
மேலும் படிக்க...
PM Kisan திட்டத்தின் 7-வது தவணைக்கு காத்திருப்பவரா நீங்கள்? இந்த தகவல் உங்களுக்கு தான்?