தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் முடிவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையானது (CRPF) இந்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இப்படையானது மாநில/யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு தன்னிச்சையானது மட்டுமல்ல பாகுபாடு காட்டக்கூடியது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதியிருந்தார்.
இந்தி பேசாத மக்களை தொடர்ந்து ஒன்றிய அரசு புறக்கணிப்பதை எதிர்த்தும், தேர்வினை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்தக்கோரியும் வரும் 17-ம் தேதி, சென்னையில் மொழி உரிமை காக்கும் போராட்டம் திமுகவின் இளைஞர்-மாணவர் அணி சார்பில் நடைப்பெறும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் மத்திய ஆயுத காவல் படை தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழியிலும் நடத்த (CRPF, CISF உள்ளிட்ட படைகளை உள்ளடக்கியது CAPF) ஒன்றிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஒன்றிய அமைச்சரின் அறிவிப்பினை வரவேற்றுள்ள தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு-
“ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நான் எழுதிய கடிதத்தின் விளைவாக, ஆயுதப்படை காவலர் தேர்வானது மாநில மொழிகளில் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், ஒன்றிய அரசின் அனைத்து தேர்வுகளும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த பிற கட்சித்தலைவர்களும் ஒன்றிய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
13 பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடைப்பெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், அனைத்து மாநில இளைஞர்களுக்கும் போட்டித்தேர்வில் வெற்றிப்பெற சம வாய்ப்பு கிடைக்கும் என தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் காண்க:
SSC CGL தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு- யாரை அணுகுவது? எப்படி சேர்வது?