தேனி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துளசி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் விசேஷ நாட்களில் துளசியின் விலை எகிரும் என்ற எதிர்பார்ப்பில் துளசி விவசாயிகள் அறுவடைக்கு காத்திருக்கின்றனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் சில குறிப்பிட்ட ஏக்கர் பரப்பளவில் துளசி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் பயிரிட்டு செப்டம்பர் மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் வகையில் கூடலூர் பகுதி விவசாயிகள் துளசி சாகுபடி செய்துள்ளனர்.
துளசி மருத்துவ பயன்பாடு மற்றும் கோயில் பூஜைகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் கோயில்களில் நடைபெறும் பூஜைக்கு பயன்படுத்தவும் நெருங்கி வரும் ஆயுத பூஜை திருவிழாவை முன்னிட்டும் கூடலூர் பகுதியில் விளைந்துள்ள துளசியை அறுவடை செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
தினசரி வருவாய் தரக்கூடிய பயிராக துளசி இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் துளசி பயன்பாடு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் புரட்டாசி மாதத்தின் போது அறுவடைக்கு தயாராகும் வகையில் துளசி சாகுபடி செய்வதாக கூடலூர் பகுதி விவசாயிகள் கூறி வருகின்றனர்.
பராமரிப்பு மற்றும் பாசன முறை எளிது என்பதால் கூடலூர் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் துளசி சாகுபடியை மேற்கொண்டுள்ளனர் . தற்போது கிலோ 30 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்கப்படும் நிலையில் புரட்டாசி விசேஷ நாட்களில் கிலோ 50 ரூபாய்க்கு துளசி விற்பனையானால் துளசி விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகும் என்கின்றனர் விவசாயிகள்.
மேலும் படிக்க: