கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால், எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முழு ஊரடங்கு
அரசு தொடர்ச்சியாக எடுத்த நடவடிக்கைகளால், கொரோனா (Corona) என்ற பெருந்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுகிற சங்கிலியை, முதலில் உடைத்தாக வேண்டும். அதற்காகவே மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை (Full Curfew) அறிவித்தோம். ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் முறையாகவும், முழுமையாகவும் கடைபிடித்ததால் தான், இந்த அளவுக்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. எனவே, விதிமுறைகளை பின்பற்றி நடந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. அதே எச்சரிக்கை உணர்வோடு, மக்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். கொரோனா கட்டுக்குள் வந்து விட்டது என்று தான் சொன்னேனே தவிர, முழுமையாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று சொல்லவில்லை. மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கட்டுப்பாடுகள்
அரசு, மக்களுடைய நெருக்கடியை உணர்ந்திருப்பதால், கொரோனா குறைந்து வரும் மாவட்டங்களில், சில தளர்வுகளை கொடுத்திருக்கிறோம். சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம். அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தளர்வுகள் கொடுத்து விட்டனர் என்று அவசியம் இல்லாமல், வெளியில் நடமாடக் கூடாது. ஒவ்வொருவரும் சுயகட்டுப்பாடுகளை விதித்து கொள்ள வேண்டும். டீக்கடைகளில் (Tea shops) கூட்டம் கூடுவதை, மக்கள் தவிர்க்க வேண்டும். தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தாக வேண்டும். முடிதிருத்தும் நிலையங்களிலும், கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். போலி மது, கள்ள மது போன்ற தீமைகள், தமிழகத்தை சீரழித்து விடக் கூடாது என்பதில், இந்த அரசு கவனமாக உள்ளது. 'டாஸ்மாக்' கடைகள், முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும்.
கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால், எந்த நேரத்திலும், இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும். கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள், தங்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும். காவல் துறை கண்காணிப்பு இல்லாமலே, கட்டுப்பாட்டோடு நடந்து கொள்கிற மக்களாக, மக்கள் மாற வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.
பொது போக்குவரத்து சேவை, விரைவில் இயங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். அதற்கு, மக்கள் துணை அவசியம். தொற்றுப் பரவலை தகர்க்கும் வல்லமை, மக்களுக்கு உண்டு. மக்கள் சக்தியே உயர்ந்தது என்பதை விரைவில் நிரூபிப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
4941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு விநியோகம்! மத்திய அரசு தகவல்!
பள்ளிகள் தற்போது திறக்கப்படாது! பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு!