கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கு காரீப் பருவத்தில் சாகுபடி செய்த நெல் (சொர்ணவாரி)-1 மற்றும் கம்பு பயிருக்கு பயிர் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
விவசாயிகள் தங்கள் பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு நஷ்ட ஈடு பெற்று வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நெல் மற்றும் கம்பு பயிர்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இவ்வாண்டில் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சொர்ணவாரி )-1 பயிருக்கு 31.07.2024 மற்றும் கம்பு பயிருக்கு 16.08.2024-ஆம் தேதி வரையில் விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.651-ம், கம்பு பயிருக்கு ரூ.215-ம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் தொகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இதற்கு தேவையான ஆவணங்கள், நடப்பு பருவ அடங்கல் (பசலி ஆண்டு 1434), சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவையாகும். பதிவு செய்யும்போது விவசாயின் பெயர் மற்றும் விலாசம், நில பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்திட வேண்டும். எனவே, விவசாயிகள் இப்பயிர் காப்பீடு திட்டத்தில் தவறாது இணைந்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்:
முன்னதாக கடந்த வாரம் நடைப்பெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அடுக்கடுக்காக புகார்களையும்/கோரிக்கைகளையும் முன்வைத்தனர் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள். அவற்றில் சில முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு-
செங்கணாங்கொல்லை கிராமத்தில் துணை மின் நிலையம் அமைத்து தந்திடவும், கெடிலம் ஆற்றில் தடுப்பணை அமைத்து தந்திடவும், காட்டுபன்றிகளால் விவசாயிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதினால் உடனடியாக நடவடிக்கை எடுத்திடவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சித்தூர் மற்றும் சாத்தனூர் இணைப்பு சாலையை அகலப்படுத்திடவும், கரும்பு பூச்சி தாக்குதல் அதிகம் இருப்பதால் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்துகளை குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்திடவும், ஜவ்வரிசி தொழிற்சாலை அமைத்து தந்திடவும், பாதூர் கிராமத்தில் வயல்வழி சாலை அமைத்து தந்திடவும், கல்வராயன்மலையில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைத்து தந்திடவும், கள்ளக்குறிச்சி நகராட்சியில் காய்கறி மொத்த விற்பனை சந்தை அமைத்து தந்திடவும், அனைத்து கிராமங்களிலும் உலர்களம் அமைத்து தந்திடவும், கரும்பு வெட்டுக்கூலி குறைக்க முத்தரப்பு கூட்டம் நடத்திடவும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தாவடிப்பட்டு முதல் சேஷசமுத்திரம் வரை உள்ள சாலையில் பாலம் பழுதடைந்துள்ளதை சரிசெய்து தந்திடவும், கோமுகி அணை தூர்வாரிடவும், மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி வழங்கிடவும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர். இக்கோரிக்கைகள் மீது தொடர்புடைய துறை அலுவலர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய பதில்களை வழங்கிட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Read more:
இராசாயன உரத்தினால் மெல்ல உயரும் வெப்பம்- கட்டுப்படுத்த விவசாயிகள் என்ன செய்யலாம்?
PM Kisan- விவசாயிகள் eKYC பதிவு செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு: முழு விவரம் காண்க?