சேலம் மாவட்டத்தில் விதிமுறை மீறி, தரக்குறைவான விதைகள் விற்ற 203 விதை விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சமீபத்தில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் அறிவித்திருந்தது, சேலம் மாவட்ட விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
பயிர்விளைச்சல் அதிகரித்து அதிகமான வருமானம் ஈட்டித்தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானதாகும். எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் தரும் இரகங்கள் / வீரிய ஓட்டு விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற அரசு வேளாண்மை விரிவாக்க மையம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே உரிய விலைப்பட்டியலுடன் பெற்று வாங்கி பயன்பெறுமாறு ஆட்சியர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
விலைப்பட்டியல் பெறும் போது பட்டியலில் பயிர் ரகம், நிலை, வாங்கிய அளவு குவியல் எண், காலாவதி நாள், பட்டியல் முகவரி, தொடர்பு எண் குறிப்பிட்டு உள்ளதா என அறிந்து விதைகளை வாங்கவேண்டும். தரமான விதைகளை, சரியான விலையில் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையிலும் போலி விதை விற்பனையை தடுக்கவும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இத்துறை இயக்குநர் வழங்கும் வழிமுறைபடி சேலம் விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தின் மூலம் இதுவரை 118 அரசு, 192 அரசுசாரா மற்றும் 842 தனியார் விதை விற்பனை நிலையங்களுக்கு விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் விதை ஆய்வு துணை இயக்குநர் கட்டுப்பாட்டில் சேலம் ஓமலூர், சங்ககிரி, ஆத்தூர், தலைவாசல் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு விதை ஆய்வாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவ்வலுவலர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு, அரசுசாரா மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைகளின் தரம், விலை மற்றும் எடை குறித்து உரிய கால அட்டவணைப்படி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விதை ஆய்வில் எவையெல்லாம் ஆராயப்படும்?
ஆய்வின் போது விதை விற்பனைக்கான உரிமம் இருப்பு, விலைப்பட்டியல் பலகை, விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், பதிவுச்சான்றிதழ், முளைப்பு திறனறிக்கை ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்வர். ஆய்வின் போது விதைகளின் முளைப்புத்திறன் உறுதி செய்திட விதைமாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்காக சம்மந்தப்பட்ட சேலம், நாமக்கல் மற்றும் கோவை விதை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
விதை விற்பனையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விதைகளை விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் விதைகளுக்கு உரிய முளைப்புத்திறன் முடிவுகள் மற்றும் இதர வெளிமாநில சான்று பெற்ற விதைகளுக்கு படிவம் 2 ஆகியவை பராமரிக்க வேண்டும்.
விதைகள் இருப்பு வரப் பெற்றவுடன் பணி விதை மாதிரிகள் சேகரித்து சம்மந்தப்பட்ட விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி முளைப்புத்திறன் முடிவுகளில் தேர்ச்சி பெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விவர அட்டை குறைபாடுகள் உள்ள விதைகள் மற்றும் காலாவதியான விதைகளை விற்பனை செய்யக்கூடாது.
Read more: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகை அதிகரிப்பு
விதிமுறைகளை மீறி கூடுதல் விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் விதை விற்பனை நிலையங்களில் பராமரிக்க வேண்டிய ஆவணங்கள் பராமரிக்காத விதை விற்பனையாளர்களின் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 01.04.2023 முதல் இதுவரை விதிமுறை மீறிய / தரக்குறைவான விதைகள் விற்ற 203 விதை விற்பனை நிலையங்கள் மீது துறைரீதியாக / சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ரூ.164.11 இலட்சம் மதிப்புள்ள 2234 மெட்ரிக் டன் விதைகள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Read more:
பத்திரிக்கையாளர் டூ விவசாயம்- பசுமைக்குடில் மூலம் லட்சங்களில் வருமானம்