கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் சிறுதானிய விவசாயம் குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக வரகு மற்றும் கம்பு ஆகிய சிறுதானியங்களை பயிர்செய்து நல்ல லாபம் ஈட்டலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பல சிறுதானிய ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி – கோம்பை மலை அடிவாரத்தில், கம்பு, கேள்வரகு, தினை உள்ளிட்ட சிறுதானிய விவசாயம் குறைந்துள்ளது. இதனை ஊக்குவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள உத்தமபாளையம், சின்னமனூர், குச்சனூர், மார்க்கையன் கோட்டை, உள்ளிட்ட ஊர்களில் நெல் விவசாயம் சுமார் 14,000 ஏக்கர் பரப்பளவில் செய்யப்படுகிறது.
தேவாரம், கோம்பை, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, கே.கே.பட்டி பண்ணைப்புரம், உள்ளிட்ட மலையடிவாரத்தில் உள்ள நிலங்களில் மானாவாரியாக சிறுதானியங்களான வரகு, சாமை, திணை, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, சோளம், இவை அதிக ஏக்கரில் பயிரிடப்படுவது வழக்கம்.
பருவம் தவறிய மழை, மக்களின் நுகர்வு உள்ளிட்ட காரணிகளால் தற்போது சிறுதானியங்கள் அதிக ஏக்கர் பரப்பில் காணமுடிவதில்லை. அங்குள்ள விவசாயிகள் சிறுதானிய விவசாயத்தை தவிர்த்து, மாற்று விவசாயமாக, தக்காளி, அவரை, பீன்ஸ், உள்ளிட்ட காய்கறிகளை பயிர் செய்துவருகின்றனர்.
3000 ஏக்கர் டூ 100 ஏக்கர்
சிறுதானிய விவசாயம் இந்த பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பில் செய்யப்படுவது வழக்கம். தற்போது 100 ஏக்கர் கூட விவசாயம் இல்லை. இது விவசாயிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம் மலையடிவார நிலங்களில், இப்போதெல்லாம் விவசாயம் இல்லாமல் வறட்சி காணப்படுகிறது. அதே வேளையில் நெல் விவசாயம், பெரியாறு அணையை நம்பி செய்யப்படுகிறது. இதில் மழை பெய்தால், அணையில் தேக்கப்படும் தண்ணீர் மூலம் விவசாயம் நடக்கிறது.
குறைந்து வரும் சிறுதானிய நுகர்வு
சிறுதானிய விளைசல் குறித்து ராயப்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வம் கூறுகையில், சிறுதானிய விவசாயம் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு அதிகம் செய்யப்பட்டது. அப்போது விவசாயிகள், சிறுதானியங்களை சந்தைக்கு கொண்டு செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவர் நல்ல லாபமும் கிடைத்தது. ஆனால் மக்கள் சிறுதானியங்களை இப்போது விரும்வதில்லை. உணவாக பயன்படுத்துவதும் குறைந்துவிட்டது. மாறாக, அரிசி சாப்பாட்டை விரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதனால், சிறுதானிய விவசாயம் குறைந்து விட்டது. மக்களின் நல்வாழ்வுக்காக, இனிவரும் காலங்களில் சிறுதானிய விளைச்சலை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற வேளாண்துறை சில எளிய சாகுபடி முறைகளை அறிவித்துள்ளது. விவசாயிகள் இதனை பின்றபற்றி சிறுதானியங்களை பயிர்செய்து நல்ல லாபம் பெறலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
வரகுக்கு நல்ல வரவு உண்டு
இதுதொடர்பாக தேனி மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறுகையில், வரகு பயிரிடும் விவசாயிகளுக்கு கோ 3, ஏ.பி.கே 1 ஆகியவை நல்ல லாபம் தரும் ரகங்கள் என தெரிவித்துள்ளனர்.
பயிரிடும் முறை
- மரக்கலப்பை கொண்டு 2 முறை நன்கு ஆழமாக உழுது நிலத்தை சமன் செய்ய வேண்டும்.
- அசோஸ்பைரில்லம் 600 கிராம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 600 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்து பின், விதைப்பு செய்ய வேண்டும்.
- கை விதைப்பு முறைக்கு ஹெக்டேருக்கு 12.5 கிலோ விதை பயன்படுத்த வேண்டும்.
- விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பு செய்தால் ஹெக்டேருக்கு 10 கிலோ விதை பயன்படுத்த வேண்டும்.
- வரிசைக்கு வரிசை 22.5 சென்டிமீட்டர் 10 சென்டிமீட்டர் இடைவெளியும் இருக்க வேண்டும்.
- ஒரு ஹெக்டேர் நிலத்தில் 12.5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பி, பின் உழ வேண்டும்.
- தொழு உரத்துடன் 10 பொட்டலங்கள் அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலங்கள் பாஸ்ப்போபாக்டீரியா ஆகிய நன்மை தரும் உயிர் உரங்களை சேர்த்து இடலாம்.
- ஹெக்டேருக்கு முறையே 44:22 கிலோ தழை மற்றும் மணிச்சத்துக்களை இட வேண்டும்.
- பயிர் விதைத்த 15ம் நாள் ஒரு முறையும், 40 நாள் ஒரு முறையும் கைக் களை எடுக்க வேண்டும்.
- களை எடுத்தவுடன் வரிசைக்கு வரிசை 22.5 சென்டிமீட்டர் மற்றும் செடிக்கு செடி 10 சென்டிமீட்டர் இடைவெளியில் பயிர்களை களைக்க வேண்டும்.
- விதையின் மூலம் கதிர்கரிப்பூர்டை நோயை தடுக்க ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் மேன்கோசெப் (அ) குளோரோதலோனிலை கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- நோய் எதிர்ப்பு இரகமான கோ 3ஐ பயிரிடலாம். கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்து தானியங்களை பிரித்தெடுக்க வேண்டும்.
- அதன்பிறகு இவற்றை நன்றாக காயவைத்து, சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விபரங்களை பெற விவசாயிகள் அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர் அலுவலகத்தை அணுகலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்லா கட்ட கம்பு இருக்கு
கோம்பை மற்றும் தேவாரம் ஆகிய மலையடிவாரப் பகுதிகளில் இறவை பாசன வசதி உள்ள விவசாயிகள் கம்பு பயிரிடுவது இது ஏற்ற தருணமாகும். கோ-7, கோ (சியு) 9, ஜசிஎம்வி-221, ராஜ்-171, எக்ஸ்-7 ஆகியவை ஏற்ற ரகங்கள் என தெரிவித்துள்ளனர்.
- ஹெக்டேருக்கு 3.75 கிலோ விதை தேவைப்படும்.
- நாற்றாங்கால் ஹெக்டேருக்கு 7.5 சென்ட் அளவிற்கு இருக்க வேண்டும்.
- 3×1.5 மீட்டர் அளவு கொண்ட 6 படுக்கைகள் 1 சென்டில் அமைத்து அரை மீட்டர் கால்வாய் அரை அடி ஆழத்தில் ஒவ்வொரு படுக்கையை சுற்றி அமைக்க வேண்டும்.
- ஹெக்டேருக்கு 750 கிலோ தொழுஉரம் இட வேண்டும்.
- தேன் ஒழுகல் நோய் பாதித்த விதைகளை நீக்க 10 லிட்டர் நீரில் 1 கிலோ உப்பினை கரைத்து விதைகளை அதில் கொட்டி மிதக்கும் விதைகளை நீக்க நல்ல தண்ணீர் கொண்டு 3,4 முறை விதைகளை கழுவி பின்பு நிழலில் உலர்த்த வேண்டும்.
- தண்டு ஈ மற்றும் தண்டு துளைப்பான் நோய் தாக்காமல் இருக்க குளோரிபைபாஸ் 36 டபிள்யூ.எஸ்.வி அல்லது பாசலோன் 35 இசி 4 மில்லியுடன் 5 கிராம் பசை இவற்றை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைக்க வேண்டும்.
- அடிச்சாம்பல் நோய் தாக்காமல் இருக்க மெட்டலாக்சில் 6 கிராம் உடன் 5 மில்லி தண்ணீர் கலந்து 1 கிலோ விதையுடன் கலக்க வேண்டும்.
- விரல்களால் 1 சென்டிமீட்டர் ஆழத்திற்கு கோடுகள் இட்டு, 1 படுகைக்கு அரை கிலோ விதையினை தூவி மண்ணில் மூட வேண்டும்.
- மிதைல் பாரதியான் மருந்தினை விதைத்தவுடன் தூவி எறும்புகளிலிருந்து பாதுகாக்கலாம்.
- நாற்றுகளை தண்டு ஈயிலிருந்து காப்பதற்கு கார்போபியூரான் 3 ஜி 600 கிராம் கலந்து தூவி விட வேண்டும்.
- 30 சென்டிமீட்டர் கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
- மண்ணில் நீர் உறிஞ்சிக்கொள்ளும் வரை மட்டும் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
- 6 மீட்டர் உள்ள பார்கள் 45 சென்டிமீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். இடைவெளி 45×15 சென்டிமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியபடி உரங்கள் இட வேண்டும். தற்போதைய காலத்தில் வரகு மற்றும் கம்பு பயிற்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் நல்ல லாபம் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Read More...
உள்ளூா் பாரம்பரியப் பயிா் உற்பத்தி அதிகரிப்பு அவசியம்! - பயிர் பாதுகாப்புதுறை வலியுறுத்தல்!