டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ரேசன் கடைகளில் இலவச சர்க்கரை வழங்குவதற்கான டெல்லி அமைச்சரவையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து ரேசன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
டெல்லி அரசின் கீழ் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நகரத்தில் உள்ள பின்தங்கிய குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தணிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், டெல்லி அரசு சர்க்கரை மானியத் திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) பயனாளிகளுக்கு இலவச சர்க்கரையை வழங்கும். AAY ரேசன் கார்டுதாரர்களுக்கு சர்க்கரை விநியோகம் டிசம்பர் 2023 வரை இலவசமாக வழங்கப்படும்.
டெல்லியில் உள்ள தேசிய உணவுப் பாதுகாப்பு அட்டைதாரர்கள், சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவுகளில் சிலருக்கு இப்போது இலவச சர்க்கரை கிடைக்கும். ஜூலை மாதம் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு இலவச சர்க்கரை விநியோகத்திற்கான திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இப்பயனாளி குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கோதுமை மற்றும் அரிசியுடன் சேர்த்து இலவச சர்க்கரையும் இனி கிடைக்கும்.
இந்தத் திட்டத்தை தடையின்றி செயல்படுத்த வசதியாக, சர்க்கரை மானியத் திட்டத்தின் கீழ் இலவச சர்க்கரை, குறிப்பாக அந்தியோதயா அன்ன யோஜனா வகை கார்டுதாரர்களுக்கு 1 கிலோ சர்க்கரை வழங்கும் விவகாரம், அமைச்சரவையின் பரிசீலனைக்கு கொண்டு வரப்பட்டது. 21 ஆகஸ்ட் 2023 அன்று இந்த முன்மொழிவு அமைச்சரவை குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மட்டும் 68,747 தேசிய உணவுப் பாதுகாப்பு அட்டைதாரர்கள் உட்பட தோராயமாக 2,80,290 பயனாளிகள் அரசின் இந்த முடிவால் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தினை முழு வீச்சில் செயல்படுத்த 111 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் இந்த முன்னெடுப்பு அப்பகுதியிலுள்ள மக்கள் மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து மாநில மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்த உத்தரவு பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக 90 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இந்த ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம் என ஆம் ஆத்மி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தங்களின் வாக்குறுதி மற்றும் செயல் திட்டங்களால் காங்கிரஸ், பாஜகவிற்கு இணையாக தேசிய அரசியலில் முக்கிய கவனம் பெற்று வருகிறது ஆம் ஆத்மி.
மேலும் காண்க:
குடும்பத் தலைவிக்கான ரூ.1000- விசாரிக்க வீடு தேடி வரும் அலுவலர்கள்
WhatsApp-ல் வந்தாச்சு AI ஸ்டிக்கர் வசதி- எப்படி உருவாக்குவது?