காவிரி டெல்டா மாவட்டங்களில் முதன்மையான ஆறுகளில் ஒன்றான வெண்ணாற்றில் ஆங்காங்கே உருவாகியுள்ள மணல் திட்டுகளால் புதர்களாக மாறி நீரோட்டத்துக்கும் பெரும் இடையூறாக மாறி வருகிறது.
கல்லணையிலிருந்து பிரியும் வெண்ணாறு தஞ்சாவூர் அருகே தென்பெரம்பூரில் வெண்ணாறு, வெட்டாறு என இரு ஆறுகளாகப் பிரிகிறது. இதையடுத்து, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் வெண்ணாறு, பாமணியாறு, கோரையாறு என 3 ஆறுகளாகவும், கொரடாச்சேரி அருகே வெண்ணாறு, ஓடம்போக்கி என 2 ஆறுகளாகவும் பிரிந்து செல்கிறது.
பல்வேறு நதிகளாகப் பிரிந்து செல்லும் வெண்ணாறு இறுதியில் அரிச்சந்திரா நதியாக நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்த வெண்ணாற்றை நம்பி தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் 4.63 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆறு முற்காலச் சோழர் காலத்தில் பாசனத்துக்கான நீர் வளத்தை மேம்படுத்துவதற்காக வெட்டப்பட்டது. இதில், அக்காலத்தில் நீர் வழிப் போக்குவரத்தும் மேற்கொள்ளப்பட்டதாகச் சான்றுகள் கூறுகின்றன.
இந்நிலையில், வெண்ணாற்றில் ஆங்காங்கே மணல் திட்டுகள் உருவாகி செடி, கொடிகள், மரங்கள் வளர்ந்து அடர்ந்த புதர்களாக மாறி வருகிறது. குறிப்பாக, பூதலூர் அருகே தொண்டராயம்பாடியில் தொடங்கி பிரம்மன்பேட்டை வரை ஏறத்தாழ 3.50 கி.மீ. தொலைவுக்கு செடி, கொடிகள் அடர்ந்தும், மரங்கள் வளர்ந்தும் காடு போல காணப்படுகிறது. இதனால் அகண்று ஓடிய தண்ணீர் வாய்க்கால் போல் ஓடும் நிலை உள்ளது. இதேபோல, பள்ளியக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆற்றின் ஒரு பகுதியில் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
மணலுடன் மண் சேரும்போது வண்டல் மண்ணாக மாறி, செடி, கொடிகளும், மரங்களும் வளர்வதால், ஆங்காங்கே திட்டுகள் உருவாகிறது. இதனால், பெரும்பாலான இடங்களில் ஆற்றின் அகலமும் குறைந்து வருகிறது. மேலும், தண்ணீர் குறைவாக வரும்போது நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வெண்ணாற்றிலிருந்து கிளை ஆறு, வாய்க்கால்களுக்கு தண்ணீர் பாய்ந்து செல்வதும் தடைப்படுகிறது. நீரோட்டம் அதிகமாக இருக்கும்போது ஆற்றின் போக்கு மாறி கரையை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்துவிடும் அபாயமும் உள்ளது. மேலும் அதிக நீரோட்டத்தின் போது உடைப்பு ஏற்பட்டால் சாகுபடி வயல்களில் பயிர்களும் பாதிக்கப்படும்.
இதேபோல, காவிரியிலும் பல இடங்களில் இருந்தாலும் கூட, வெண்ணாற்றில் புதர்கள் அதிகமாகி வருவது எதிர்காலத்தில் பேராபத்தை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், வெண்ணாற்றில் வண்டல் மண் தேங்கும்போது தொடக்கத்திலேயே கரைத்து அகற்றினால் திட்டுகள் உருவாவதையும், காடுகளாக மாறுவதையும் தடுக்க முடியும். ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், மரம், செடி, கொடிகள் வளர்ந்து, காடுகள் போல மாறுகின்றன. இந்தத் திட்டுகள் காட்டுப் பன்றிகளுக்கு மறைவிடமாக இருக்கிறது. இதில், காட்டுப் பன்றிகள் பதுங்கி அருகேயுள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துகின்றன. இது தொடர்கதையாக நடந்து வருகிறது.
சில இடங்களில் இந்த அடர்ந்த பகுதியைப் பயன்படுத்தி சமூக விரோதச் செயல்களும் நடக்கிறது. இந்தப் புதர் திட்டுகளால் ஆற்றில் 50 சதவீதம் அடைத்து விடுவதால், நீரோட்டமும் பாதிக்கப்படுகிறது. குளத்திலுள்ள மண்ணுக்கு பதிலாக இந்தப் புதர் திட்டுகளில் படிந்துள்ள வண்டல் மண் விளைநிலங்களுக்கு மிகச் சிறந்த உரமாக இருக்கிறது. எனவே, இந்த வண்டல் மண்ணை விவசாயப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தால், விவசாயிகளே சொந்த செலவில் எடுத்துச் செல்வர். இதன் மூலம், ஆற்றில் திட்டுகள் உருவாவதையும் தடுக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், இந்த மண் திட்டுகளால் இதுவரை நீரோட்டத்தில் எந்தவித பிரச்னையும் ஏற்பட்டதில்லை. அவ்வாறு ஏற்படுவதாகப் புகார்கள் வரும்போது உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.
ஆனால், சிறு திட்டங்கள் மூலமே இதுபோன்ற மண் திட்டுகள் அகற்றப்படுகின்றன. இதனால், அகற்றப்பட்ட சில ஆண்டுகளிலேயே அதே இடத்தில் மீண்டும் திட்டுகள் உருவாகி, செடி, கொடிகள் வளர்கின்றன. எனவே, வெண்ணாறு முழுவதும் மண் திட்டுகளை அகற்ற தமிழக அரசு பெருந்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இல்லாவிடில் விவசாயிகளுக்கு விவசாயப் பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். இதைச் செய்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதே அனைத்து விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. உடன் இந்த கோடை காலத்திலேயே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் மழைக்காலத்தில் விவசாயிகள் பெரும் பாதிப்புகளை சந்திக்கும் நிலை உருவாகி விடும்.
Read more:
வெம்பூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டை அனுப்பிய விவசாயிகள்