69 % கூடுதலாக பெய்த மழைப் பொழிவு காரணமாக பாதித்த உளுந்து, எள் ஆகிய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி வரும் 20ம் தேதி நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அறிவித்துள்ளனர்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில தலைவர் தனபாலன் பேசும்போது, நாகை மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் 69 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. இதனால் எள், உளுந்து ஆகிய பயிர்கள் முற்றிலும் பாதிப்படைந்துவிட்டது. இந்த பயிர் பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் 3 மாத காலம் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே பாதித்த உளுந்து, எள் ஆகிய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
நாகை மாவட்டத்தில் விளைச்சலே இல்லாத போது காப்பீட்டு நிறுவனம் குறைந்தபட்ச விளைச்சலை நிர்ணயம் செய்யவேண்டும் என கூறுவது கண்டிக்கத்தக்கது. எனவே வேளாண்மை துறை தலையிட்டு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய காப்பீட்டு தொகை கிடைக்க செய்ய வேண்டும். தேசிய நீர்வளத்தின் முன்னாள் உறுப்பினர் காமராஜ் கொண்டு வந்த திட்டமான தேசிய நீர்வழி சாலை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதை தென்னிந்திய நதிகள் இணைப்பில் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். அவ்வாறு அமல்படுத்தினால் ஏராளமான பொருட்செலவு மிச்சப்படுத்த முடியும். இந்த மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
மேலும் படிக்க