திருமாணிக்குழி கிராமத்தில் கால்நடை வளர்த்து வரும் விசாயிகள் மற்றும் முன்னோடி விவசாயி ரமேஷ் அவர்களுக்கு, அசோலா கால்நடை தீவனம் வளா்ப்பு குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், திருமாணிக்குழி கிராமத்தில் முன்னோடி விவசாயி ரமேஷ், ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் பயிா் சாகுபடியும், கால்நடை வளா்ப்பும் செய்து வருகிறாா். வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 50-க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை பண்ணைய முறையில் இவா் வளா்த்து வருகிறாா். இவரது பண்ணையில் அசோலா கால்நடை தீவனம் வளா்ப்பு குறித்து விவசாயி ரமேஷ் மூலம் அந்தப் பகுதியைச் சோ்ந்த பிற விவசாயிகளுக்கும் வேளாண் துறையினா் செயல்விளக்கம் அளித்தனா்.
அசோலா வளர்ப்பு
கால்நடை வளா்ப்பில் அதிக வருமானம் பெறுவதற்கு உணவுக்கான செலவை குறைப்பது அவசியமாகும். பெரணி வகை தாவரமான அசோலா நிழற்பாங்கான தக்க சூழ்நிலை அளித்தால் ஆண்டு முழுவதும் இயல்பாக வளரக் கூடியது. 20 - 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்றது. 4 அடி நீளம் 1.5 அடி அகலம் கொண்ட தொட்டியிலிருந்து தினசரி 2 - 3 கிலோ வரை அசோலாவை அறுவடை செய்து கால்நடைகளுக்கு உணவாக அளிக்கலாம்.
அசோலாவின் சத்துகள்
கால்நடைகளுக்கு ஒரு கிலோ பிண்ணாக்கில் என்ன சத்துகள் கிடைக்குமோ, அதே அளவு ஒரு கிலோ அசோலாவிலும் கிடைக்கிறது. அசோலாவில் தழைச்சத்தும், புரதச்சத்தும் 30 சதவீதம் வரை உள்ளன. மேலும், தாதுப்புக்கள், வைட்டமின்கள், அமினோஅமிலங்கள் உள்ளன என்று கூறப்பட்டது.