ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள வனச்சரக காப்புக் காடுகளில் கோடை காலத்தில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுத்து வனவிலங்கு மற்றும் அரிய வகை மரங்களைப் பாதுகாக்கும் வகையில் தீயணைப்புத் துறை (Fire Department) சார்பில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வுடன் கூடிய காட்டுத்தீ தடுப்பு முறைகள் மற்றும் செயல்விளக்க ஒத்திகைப் பயிற்சி அளிக்கப்பட்டது.
காட்டுத்தீ தடுப்பு முறை
ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம், ராயக்கோட்டை உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த வனச்சரகங்களில் உள்ள காப்புக் காடுகளில் யானை (Elephant), சிறுத்தை, புள்ளிமான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காப்புக்காடுகளில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் ஆங்காங்கே தீப்பற்றி எரிவதும், இந்த காட்டுத் தீயால் வனத்தில் உள்ள நுண் உயிர்கள் முதல் பெரிய வனவிலங்குகளும் உயிரிழப்பதுடன் அரிய மூலிகை செடி (Herbal Plant), கொடி, மரங்களும் தீயில் அழிந்து விடுவதும் வழக்கமான நிகழ்வாக உள்ளது.
இந்த காட்டுத்தீயில் இருந்து வனத்தில் உள்ள அரிய வகை மரங்கள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட வனத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைத்துக் கண்காணிப்பது, எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வனத்தில் பயன்படுத்தாமல் தவிர்ப்பது குறித்து வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (Awareness program) நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒத்திகை பயிற்சி
நடப்பாண்டில் உரிகம் உள்ளிட்ட வனச்சரகங்களில் ஆங்காங்கே ஏற்படும் காட்டுத் தீயைத் தடுத்து வன விலங்குகள் (Wildlife) மற்றும் மரம் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில் தீயணைப்புத் துறையின் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வுடன் கூடிய காட்டுத்தீ தடுப்பு முறைகள் குறித்து செயல் விளக்கத்துடன் ஒத்திகை பயிற்சி நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக ஓசூர் வனச்சரகம் பேரண்டப்பள்ளி காப்புக்காடு பகுதியில் நடைபெற்ற இந்த காட்டுத் தீ தடுப்பு முறைகள் மற்றும் செயல் விளக்கத்துடன் கூடிய ஒத்திகைப் பயிற்சியை ஓசூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்- பணி நிலைய அலுவலர் மாது தலைமை தாங்கி நடத்தினார். இந்தப் பயிற்சியில் தீயணைப்பு நிலையப் பணியாளர்கள் பங்கேற்று, பயிற்சி அளித்தனர்.
இதில் வனப்பகுதியில் தீப்பிடித்து எரியும்போது விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து வனத்திலுள்ள விலங்குகள் மற்றும் இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாக்கும் முறைகள், காற்றின் வேகத்தில் காட்டுத்தீ இதர பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு வகையில் காட்டுத்தீயை அணைக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வனவிலங்குகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த வனத்துறை! பலாக்காய்கள் வெட்டி அகற்றம்
கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க காற்றோட்டமுள்ள கொட்டகை! ஆராய்ச்சி நிலையம் தகவல்!
தருமபுரியில் விவசாயப் பயிர்களை சேதப்படுத்திய யானை பிடிபட்டது!