காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தில் பழமையான ஶ்ரீமந்தைவெளி மாரி எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் காணும் பொங்கலை முன்னிட்டு ஶ்ரீமந்தைவெளி மாரி எல்லையம்மன் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மந்தைவெளி மாரி எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வண்ண வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.
பின்னர் மேளதாளங்கள் முழங்க தாமல் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மந்தைவெளி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனாக தீச்சட்டி எடுத்தல், உடலில் முள் போடுதல், அலகு குத்துதல், வேடமிட்டு நடனம் ஆடுதல் போன்ற வேண்டுதல்களுடன் ஊர்வலமாக சென்று அம்மனை தரிசித்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.
இத்திருவிழாவில் தாமல் கிராமத்தை சுற்றியுள்ள பாலுசெட்டிசத்திரம், முட்டவாக்கம், கீழம்பி, ஆரியபெரும்பாக்கம், கிளார், முசரவாக்கம், தைப்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
மேலும் படிக்க: