தருமபுரி மாவட்டத்தில் உள்ள குளிர்பான கடைகள், பழச்சாறு கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., எச்சரித்து உள்ளார்.
கோடை காலம் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க, பலவித குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்தும் சூழல் காணப்படுகிறது. அதனால், மாவட்டம் முழுவதும் சாலையோர மற்றும் குளிர்பான கடைகளில், பரவலாக பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ளது. இந்த தருணத்தில் சாலையோர மற்றும் நிரந்தர வணிகம் செய்யும் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள், பழச்சாறுகள் வழங்குதலை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வணிகர்களும், உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.
குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும், உரிமம் பெற்ற பொருட்களாக இருக்க வேண்டும். குடிநீர் தரச்சான்று, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருத்தல் அவசியம். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்த்தல் கூடாது. காலாவதி தேதியை உறுதிப்படுத்த வேண்டும்.
பழச்சாறு கடைகளுக்கும் எச்சரிக்கை:
பழச்சாறு தயாரிக்கும் உணவு வணிகர்கள் அழுகிய பழங்களையும், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்த கூடாது. மிக்ஸி போன்றவற்றை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள் தன் சுத்தத்தை பராமரித்தல் வேண்டும். இனிப்பு சுவை கூட்ட வேதிப் பொருட்களை சேர்க்கக்கூடாது. பழச்சாற்றில் சேர்க்கப்படும் ஐஸ் கட்டிகளை, பாதுகாப்பான நீரில் தயாரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டும். பூச்சிகள் மொய்ப்பதை தவிர்த்தல் வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்களில் பழச்சாறு வழங்காமல், அரசால் அனுமதிக்கப்பட்ட கப்களில் மட்டுமே வழங்க வேண்டும். அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கும் போது, வணிகர்கள் தரக்குறியீடு, உணவு பாதுகாப்பு உரிமம், கொள்கலன்களில் வாய்ப்புறம் சீலிட்டு மூடியிருத்தல் மற்றும் காலாவதி நாள் போன்றவற்றை உறுதி செய்யவேண்டும்.
இத்தகைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து, பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான பழச்சாறுகளை வழங்க மாவட்ட நிர்வாகம், வணிகர்களை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 9444042322 என்ற செல்போன் எண்ணில் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., தெரிவித்துள்ளார்.
தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக பதிவாகி வரும் நிலையில், வெப்பநிலை தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள போதிய அளவு தண்ணீர், உடலை குளிர்விக்கும் பானங்களை அருந்த மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
pic courtesy- pexels/krishiJagran
மேலும் காண்க:
மீன் பிடிக்க வெடி மருந்தா? வரம்பு மீறினால் நடவடிக்கை எடுக்க உத்தரவு