கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விநியோகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாநிலத்தில் நிலவும் கோதுமை பற்றாக்குறையை போக்க 15,000 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்படும் என்றும், அதன் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நேற்று தெரிவித்து உள்ளார்.
“ஒன்றிய அரசு மாதாந்திர ஒதுக்கீட்டை 23,000 மெட்ரிக் டன்னிலிருந்து 8,000 ஆகக் குறைத்துள்ளது. இதனால் மாநிலத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) மூலம் கோதுமை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியும், இந்திய உணவுக் கழகம் மூலம் கோதுமையை அனுப்பக்கோரி தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் செவ்வாய்கிழமை டெல்லி செல்கிறார்.
கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விநியோகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும்” அமைச்சர் கூறினார். ஆன்லைன் மூலம் ரூ.45 செலுத்தி தபால் நிலையங்கள் மூலம் புதிய ரேஷன் கார்டுகளை அனுப்பும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
மக்களின் உணவுப் பழக்கம் மாறத் தொடங்கியது என்று மாநிலத்தின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறினார். "முந்தையதைப் போலல்லாமல், கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் கோதுமை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள். அதனால்தான் எங்களுக்கு அதிக கோதுமை தேவைப்படுகிறது," என்று அவர் கூறினார்.
முன்னதாக கோவை மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் மின்னணு பரிவர்த்தனையை தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி கலந்துக்கொண்டார்.
தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் நீலகிரி மாவட்டத்திலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு (ராகி) வழங்கும் திட்டத்தினை கடந்த மே 3 ஆம் தேதி தமிழக அமைச்சர்கள் ஒன்றிணைந்து தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரும் மொத்த அரிசி அளவில் இரண்டு கிலோவுக்கு மாற்றாக ராகியினை பெற்றுக்கொள்ளலாம்.
வேளாண் துறையின் தரவுகளின்படி, தமிழ்நாடு 2018-19 ஆம் ஆண்டில் 2.56 லட்சம் மெட்ரிக் டன், 2019-20-ல் 2.74 லட்சம் மெட்ரிக் டன், 2021-22-ல் 2.89 லட்சம் மெட்ரிக் டன் ராகியை உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: minister FB page (sakkarapani)
மேலும் காண்க:
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு தேதி மாற்றம்- முடிவுகளை இணையத்தில் எப்படி பார்ப்பது?