தீபாவளி பண்டிகையின் முக்கிய அம்சமான, இனிப்பு தயாரிப்பில் ஸ்வீட் ஸ்டால்களில் தரமிக்க பொருட்களை பயன்படுத்தி, இனிப்பு வகைகளை தயாரிக்க வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தரம் மிக்க பொருட்களை கொண்டு, இனிப்பு, பலகாரம் தயாரிக்கவும், சிறு நிறுவனங்கள் தற்காலிக லைசென்ஸ் பெறவும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு கையாளுதல், பரிமாறுதல், ஆகிய பணிகளை மேற்கொள்பவர்கள் கையுறைகள், தலைகவசம், மேலங்கிகள் அணிய வேண்டும். இனிப்பு தயாரிக்கும் இடங்கள் சுத்தமாகவும், ஈக்கள் இன்றியும் இருக்க வேண்டும். பணியின் போது ஊழியர்கள் குட்கா, பான்பராக், வெற்றிலை, புகையிலை உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். இனிப்பு தயாரிக்க வனஸ்பதி, நெய் பயன்படுத்தினால், அதுகுறித்து கடையில் போர்டு வைக்க வேண்டும். அடைக்கப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய் உபயோகிக்கக் கூடாது. பெங்காலி வகை இனிப்புகளை, தனியாக வைக்க வேண்டும். முக்கியமாக, உணவு பொருட்கள் அனைத்திலும், தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இத்துடன் தற்காலிமாக இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் ஈடுபடுவோர், உணவு பாதுகாப்பு துறையில், தங்கள் விபரங்களை பதிவு செய்து, சான்றிதழ் பெற வேண்டும். பொதுமக்கள், தாங்கள் வாங்கும் இனிப்புகளின் தரம் குறித்து, தெரிந்து கொள்ள வேண்டும். புகார் இருப்பின், உணவு பாதுகாப்பு துறைக்கு தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.