ஒன்பது மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சிகள் மற்றும் ஒன்றிய தலைவர் பதவிகளை, ஆளும் தி.மு.க., (DMK) அள்ளியது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, நேற்று காலை துவங்கியதில் இருந்து பெரும்பாலான இடங்களில், அக்கட்சியினரே வெற்றிப் பெற்றனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள, 140 மாவட்ட கவுன்சிலர்; 1,381 ஒன்றிய கவுன்சிலர்; 2,901 ஊராட்சி தலைவர்; 22 ஆயிரத்து 581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவி களுக்கு கட்சி அடிப்படையிலும், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, கட்சி சார்பற்ற முறையிலும் தேர்தல் நடத்தப்பட்டது.
இரண்டு கட்ட தேர்தலிலும் பதிவான ஓட்டுகளின் (Votes) எண்ணிக்கை, நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. நான்கு வண்ணங்களில் ஓட்டு சீட்டுக்கள் பயன்படுத்தி, தேர்தல் நடத்தப்பட்டதால் எண்ணிக்கை தாமதமாகி வருகிறது. இருப்பினும், பெரும்பாலான இடங்களை ஆளும் கட்சியான தி.மு.க., கைப்பற்றி வருகிறது. நேற்றைய மாலை நிலவரப்படி, நான்கு மாவட்ட கவுன்சிலர், 80 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை, தி.மு.க., கைப்பற்றியதாக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
உற்சாகம்
அ.தி.மு.க.,வினர் 9 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர். அதேநேரத்தில், தி.மு.க., 138 மாவட்ட கவுன்சிலர்; 1009 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியது. அ.தி.மு.க., 2 மாவட்ட கவுன்சிலர், 215 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியது. ஊராட்சி தலைவர் தேர்தலை பொறுத்தவரை, 405 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர்களில், 80 சதவீதம் பேர், தி.மு.க.,வின் மறைமுக ஆதரவு பெற்றவர்கள்.
லோக்சபா, சட்டசபை தேர்தலை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலிலும், தி.மு.க., அமோக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்து உள்ளனர். அதே நேரத்தில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கும், தனித்து போட்டியிட்ட பா.ம.க., - தே.மு.தி.க., - நாம் தமிழர் - ம.நீ.ம., உள்ளிட்ட கட்சிகளுக்கும், இத்தேர்தல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்: (மாவட்ட வாரியாக)
மொத்த இடங்கள் - 140
திமுக கூட்டணி - 138
- விழுப்புரம் - 27
- கள்ளக்குறிச்சி - 19
- வேலூர் - 14
- ராணிப்பேட்டை - 13
- செங்கல்பட்டு -15
- திருநெல்வேலி - 12
- தென்காசி -14
- காஞ்சிபுரம் -11
- திருப்பத்தூர் - 13
அதிமுக - 2
- செங்கல்பட்டு - 1
- திருப்பத்தூர் - 1
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில்,1,368 பதவிகளுக்கு முடிவுகள் தெரியவந்துள்ளது. அதில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 1007 இடங்களையும், அ.தி.மு.க., 214 இடங்களையும், பா.ம.க., 45 இடங்களையும் அ.ம.மு.க.,5 இடங்களையும் தே.மு.தி.க.,1 இடத்தையும் கைப்பற்றி உள்ளன. சுயேட்சைகள்மற்றும் இதர கட்சியினர் 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
9 மாவட்ட ஒன்றியங்களில் பெரும்பாலானவற்றை திமு.க., கைப்பற்றி உள்ளது.
இணையதளத்தில் முடிவுகள்
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், மாநில தேர்தல் ஆணையத்தின், tnsec.tn.nic.in என்ற இணையதள முகவரியில், நேற்று காலை முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. நேற்று மாலை, 7:00 மணி நிலவரப்படி, இந்த இணையதளத்தை 1.55 லட்சம் பேர் பார்வையிட்டு, தேர்தல் முடிவுகளை அறிந்து கொண்டனர். சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், இதற்கென பிரமாண்ட திரை வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் முறையாக வெளியிடப்படுகிறதா என்பதை, இந்த திரை வாயிலாக தேர்தல் ஆணையர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக வெற்றி நிலவரம்