News

Tuesday, 25 February 2020 05:43 PM , by: Anitha Jegadeesan

தமிழகம் முழுவதும் பயறு சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது. வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்தலை அடுத்து, நெல் அறுவடைக்கு பிந்தைய உளுந்து, பயறு சாகுபடி பரப்பு குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை தடுக்க வேளாண்துறை சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் பிரதான சாகுபடியாக நெல் இருக்கிறது. நெல்அறுவடை காலம் முடியும்போது உளுந்து, பயறு, பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகிறாா்கள். சில பகுதிகளில் குறுகிய நிலப்பரப்பில் எள் சாகுபடி செய்யப்படுகிறது

கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், காரைக்காலில் நெல் சாகுபடி பரப்பு குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  காவிரி நீா், பருவம் தவறிய மழை,  விளை நிலங்கள் மனைகளாக மாற்றப்படுதல் போன்ற காரணிகளால் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நெல் சாகுபடிக்கு பிறகு கோடை சாகுபடியாக உளுந்து, பயறு வகை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வர்கள். சுமாா் ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டில் இதன் பரப்பளவு சுமாா் 500 ஏக்கராக குறைக்கப் பட்டுள்ளது.

விவசாயிகள் தெரிவிக்கும் போது, முந்தைய காலங்களில் குறுவை, சம்பா, தாளடி என்று முப்பருவமும் சாகுபடி செய்த பிறகு உளுந்து பயிறு சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், உரிய நேரத்தில் காவிரி நீா் வராததால், நெற்பயிா் சாகுபடி பரப்பு குறைந்து கொண்டே வருவதாக தெரிவித்தனர். இதனால், உளுந்து, பயறு வகை சாகுபடியும் பாதிக்கப்படுகிறது.

இயந்திரங்களின் துணையின்றி வயலில் நெற் கதிா் அறுவடைக்கு செய்யும் போது, அதன் தாழ்வான பகுதி சற்று நீளமாக இருக்கும். இதனால் நீா் தேங்கி மண் ஈரப்பதத்துடன் இருக்கும்.  அதை கொண்டு உளுந்து பயறு நன்றாக வளரும். நவீன வேளாண்மையில் இயந்திரம் மூலம் அறுவடை செய்வதினால் முன்கூட்டியே வயலை நன்கு காய வைப்பது மட்டுமின்றி, நெற்கதிரை அடியோடு வெட்டி விடுகின்றனா். இதனால் நிலத்தில் ஈரப்பதம் இல்லாமல் உளுந்து பயிா் சாகுபடி செய்ய முடியாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.

மத்திய அரசு, காரைக்கால் பகுதியில் ஹைட்ரோகாா்பன் திட்டத்தை கொண்டுவர தனியாருக்கு அனுமதியளித்து இருந்தது. திட்டம் செயல்படுத்த படும் நிலையில், நிலத்தடி நீரும் வெகுவாகப் பாதிக்குமென்ற காரணத்தால், புதுவை அரசு காரைக்காலை வேளாண் மண்டலமாக அறிவிக்க இருந்த அரசாணையை ரத்து செய்தது. சாகுபடி நிலப்பரப்பு குறைவதற்கு இதுவும் முக்கிய காரணமாக்கும். அறுவடைக்கு போதிய தொழிலாளா்கள் கிடைக்காத நிலையில், இயந்திர அறுவடைதான் மாற்றாக இருந்து வருகிறது. உளுந்து பயிறு சாகுபடியை தொடா்ந்து செய்ய நல்ல தீா்வை வேளாண் ஆராய்ச்சியாளா்கள் தான் தர வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து, கூடுதல் வேளாண் இயக்குநா் கூறுகையில், உளுந்து பயறு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவது உண்மை தான். இருப்பினும், மாற்று பயிராக அதிக லாபம் தரக்கூடிய பருத்தி சாகுபடியை செய்து வருகின்றனர். அரசும் பருத்தி சாகுபடிக்கு, ஊக்கத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்குகிறது. ஒரு சில விவசாயிகள் எள் சாகுபடிகளிலும் ஈடுபடுகின்றனா். தற்போது சூழ்நிலை மாறிவிட்டதால், பருத்தி, எள் போன்ற மாற்று சாகுபடிக்கு விவசாயிகள் மாறிவிட்டனா் என்றாா்.

நன்றி: தினமணி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)