தூத்துக்குடி கடற்கரை அருகே ரூபாய் 31.6 கோடி மதிப்பிலான 18.1 கிலோ அம்பர்கிரிஸை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) பறிமுதல் செய்துள்ளது.
அழிவின் விளிம்பிலுள்ள ஸ்பெர்ம் திமிங்கலங்களால் ஆம்பெர்கிரிஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் திமிலங்களும் உள்ளது. எனவே திமிங்கிலங்களை வேட்டையாடுவது அல்லது அவற்றின் மூலம் வர்த்தகம் செய்வது சட்டவிரோத செயலாகும்.
இந்நிலையில் தான் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியின் கடற்கரை அருகே சந்தேகத்திற்கு இடமாக திரிந்த 4 பேரை கைது செய்து வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர்களிடமிருந்து சுமார் 31.6 கோடி மதிப்பிலான 18.1 கிலோ அம்பர்கிரிஸை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்ட ஈஸ்வரன், அனில், ஆனந்தராஜ் மற்றும் பெத்தேன் என 4 பேரையும் கைது செய்துள்ள நிலையில், இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுக்குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் "குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் தொடர்பில்லுள்ள அனைவரையும் கைது செய்யும் வகையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சில முக்கிய ஆவணங்களை நாங்கள் மீட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். கடலின் தங்கம் என்று வர்ணிக்கப்படும் அம்பர்கிரிஸ் ஏன் இவ்வளவு விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது என்பதற்கான காரணத்தை அறிவது அவசியம்.
அம்பர்கிரிஸ் எனப்படுவது திமிங்கிலத்தின் உமிழ்நீர் அல்லது வாந்தி என்று சொல்லப்படுகிற திரவம் தான். அம்பர்கிரிஸின் அதிக விலைக்கு முக்கிய காரணம் அவற்றை கண்டறிவதில் உள்ள சிரமமும் தான்.
மேலும், ஆம்பெர்கிரிஸ் ஒவ்வொரு திமிங்கலத்திலும் காணப்படுவதில்லை மற்றும் ஒரு சிறிய சதவீத ஸ்பெர்ம் திமிங்கலங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அம்பர்கிரிஸின் விலை அதன் தரம், வயது, அளவு மற்றும் சந்தை தேவை ஆகியவற்றைப் பொறுத்து கணிசமாக மாறுபடும்.
திமிங்கிலம் தான் உண்ணும் உணவுகளில் செரிமானம் ஆகாதவற்றை வெளியேற்றுகிறது. இது கடலில் மிதக்கும் போது சூரிய ஒளி மற்றும் கடலின் உப்பு நீரால் அம்பர்கிரிஸாக உருமாற்றம் அடைகின்றன.
இவை பெரும்பாலும் உயர் ரக வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதற்காக கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. மூளை, நரம்பியல் மற்றும் பாலியல் ரீதியான உடல் நல பிரச்சினைகளை தீர்க்கும் மருந்துகளில் மூலாதாரமாகவும் அம்பர்கிரிஸ் திகழ்கிறது.
இந்தியாவில் தொடர்ச்சியாக அம்பர்கிரிஸ் கடத்தல் தொடர்பாக வழக்குகள் அதிகரித்து வருகின்றன. சில பகுதிகளில் அம்பர்கிரிஸ்காகவே திமிலங்கள் வேட்டையாடும் நிகழ்வுகளும் நடந்தேறி வரும் நிலையில் தூத்துக்குடியில் 31.6 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் பறிமுதல் செய்துள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
pic courtesy: @ians_india (twit)
மேலும் காண்க:
உலக தேனீக்கள் தினம்- தேனீக்கள் இல்லையென்றால் நமக்கு உணவில்லையா?