மதுரையில் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் நடைபெற உள்ளன என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேளாண்மை உழவர் நலத் துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கு வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் தொடர்பான மண்டல அளவிலான பயிற்சி மற்றும் ஆய்வுக் கூட்டம் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலை வகித்தார்.
மின் இணைப்பு (Electricity Connection)
மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், வேளாண் மற்றும் உழவர் நலத் துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண் வணிக இயக்குநர் நடராஜன், எம்எல்ஏக்கள் பூமிநாதன், வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சியை தொடங்கி வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: விவசாயிகளின் முக்கியத்துவம் கருதி முதல்வர் ஸ்டாலின் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் அறிவித்தார். நிதி பற்றாக்குறை இருந்தாலும் விவசாயத்துக்குப் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
903 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளோம். கடந்த ஆண்டு 46 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்துள்ளோம். ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கியதன் மூலம் புதிதாக 4 லட்சம் ஏக்கர் நிலம் விவசாயத்துக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது.
முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலம் (Drumstick export Special zone)
அதிமுக ஆட்சியில் விவசாயிகளைக் கண்டு கொள்ளவில்லை. விவசாயத்துக்காக 10 ஆண்டுகளில் எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை. விவசாயிகளை முதலாளிகளாக, வேளாண் வணிகர்களாக்க வேண்டும் என்பதுதான் அரசின் வேலை. அந்த வேலையைச் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் நடைபெற உள்ளன என்றார்.
மேலும் படிக்க
தொடர்மழையால் கண்மாய்கள் நிரம்பியது: மகிழ்ச்சியில் விவசாயிகள்!
விவசாயத்திற்கு 16 மணிநேரம் மும்முனை மின்சாரம்: விவசாயிகள் கோரிக்கை