மின்னனு கொள்முதல் முறை கட்டாயம்- தமிழக அரசு உத்தரவு
ஏப்ரல் முதல் அனைத்து அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் கொள்முதல்களுக்கும் ‘மின்னணு - கொள்முதல்முறை’ கட்டாயமாக்கப்படுகிறது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள மின்னணு இணையதளமானது, தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், விதிகளுக்கு இணங்க முற்றிலுமாக மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களால் ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பித்தல், ஒப்பந்தப்புள்ளிகள் திறத்தல், தேர்வு பெற்றவர்களுக்கு ஆணைக் கடிதம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளும் இந்த இணையதளம் வழியாக மேற்கொள்ளப்படும்.
இதனால், அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்கள் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி விவரங்களை அறிய முடியும். மேலும், இணையதளத்தின் ஒவ்வொரு நிகழ்வும் அறிக்கையாகப் பதிவுசெய்யப்படும். ஒப்பந்தப் புள்ளி திறப்பு இணையம் மூலமாக ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும். பங்கேற்கும் அனைத்து ஒப்பந்ததாரரும் இதைப் பார்வையிடலாம்.
வணிக எல்பிஜி சிலிண்டர் விலை குறைந்தது
இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்களின் விலையினை அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படுகின்றன. 2024 ஆம் நிதியாண்டின் முதல் நாளான நேற்று வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை கிட்டத்தட்ட ₹92 குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வீட்டு உபயோக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை மாறாமல் கடந்த மாதம் விற்ற விலையிலேயே நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடப்பாண்டு மா சாகுபடியில் 20% வரை சேதம் - ICAR தகவல்
பருவமழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று ஆகியவை இந்தியாவின் மா சாகுபடியில் 20% வரை சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என ICAR சார்பில் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்."முதலில் பருவ மழை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை, ஆனால் அடுத்தடுத்து பெய்த மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, ஒட்டுமொத்த இழப்பு சுமார் 20% ஆக இருக்கும் என்று மதிப்பிடுகிறோம்," என ICAR தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்- ஜெனரல் ஏ.கே.சிங் கூறினார். வட இந்தியாவில் மட்டும் மாம்பழ விளைச்சலில் எதிர்பார்க்கப்படும் இழப்பு 30% க்கு மேல் இருக்கும், அதே நேரத்தில் தென்னிந்தியாவில், இழப்பு 8% க்கும் குறைவாக இருக்கும்.
வேளாண் அலுவலகம் அமைத்துத்தர ஏலகிரி பழங்குடியின விவசாயிகள் கோரிக்கை
அரசு மானியம், விதை, உரம் மற்றும் பிற வேளாண் பொருட்களை சேகரிக்க, 5,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின விவசாயிகள், திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள ஜோலார்பேட்டைக்கு தான் தற்போது செல்ல வேண்டியுள்ளது. ஆதலால் ஏலகிரி பகுதியிலேயே வேளாண்மை அலுவலகத்தை அமைத்துத் தருமாறு பலமுறை கோரிக்கை அளித்தும் உரிய பலனில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
STAR அந்தஸ்து பெற்ற முதல் விவசாய கல்லூரிக்கு பல்கலைக்கழக அந்தஸ்து
புதுச்சேரி மாநில வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், காரைக்காலில் செயல்படும் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தேசிய அளவில் நட்சத்திரக் கல்லூரி அந்தஸ்து பெற்றுள்ளதாகவும், அது வேளாண் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். STAR அந்தஸ்தைப் பெற்ற முதல் விவசாயக் கல்லூரி என்ற பெருமையை PAJANCOA பெற்று உள்ளது. இதன் மூலம் மேற்கொண்டு அறிவியல் ஆராய்ச்சியினை மேற்கொள்வதற்காக ரூ.63 லட்சத்தைப் பெற்றது.
தங்கத்தின் விலை - சவரனுக்கு ரூ.240 குறைந்தது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5,590 ஆக விற்ற நிலையில் மேலும் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,560 ஆக விற்பனையாகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ.240 வரை குறைந்து ரூ.44,720 ஆகவும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையும் பெரிய அளவில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50 ஆகவும், கிலோ ஒன்றிற்கு ரூ.77,500 ஆகவும் விற்பனையாகிறது.
ஜூன் மாதம் வரை கோடை வெப்பம் அதிகரிக்கும்- வானிலை மையம் எச்சரிக்கை
இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் முதல் கோடை காலம் துவங்கும். இந்த காலகட்டத்தில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் நடப்பு ஆண்டு வெப்பநிலை கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகவே இருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், பெரும்பாலான பகுதிகளில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெப்ப நிலை அதிக அளவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.