விவசாயத் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் 6.5 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 50,000 ரூபாய் பலன்களை அரசு வழங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்திய கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளார்.
சமீப காலங்களில் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை மறைமுகமாக சீண்டும் வகையில் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு முக்கியமாக உர மானியம், உணவு தானியங்கள் கொள்முதல் மற்றும் PM-KISAN போன்ற வடிவங்களில் வழங்கப்படும் நன்மைகளைப் பட்டியலிட்டார். அப்போது ”இது மற்றவர்களைப் போல் நான் சொல்லும் வாக்குறுதி அல்ல, நாங்கள் செய்துக்கொண்டிருக்கிறோம். இது மோடியின் உத்திரவாதம்” என்றார்.
ஆண்டுக்கு 50,000 ரூபாய் வரையிலான பலன்:
"நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு வகையில் சுமார் ரூ. 50,000 பெறுவதை அரசாங்கம் உறுதி செய்து வருகிறது. இதன் பொருள், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியில், ஒவ்வொரு விவசாயிக்கும் பல்வேறு வடிவங்களில் ரூ. 50,000 வரையிலான பலன் கிடைப்பது என்பதாகும் என 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் உரையாற்றும் போது மோடி கூறினார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த விலையில் உரங்கள் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது, குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) அதிக அளவு தானியங்களை வாங்கியுள்ளது மற்றும் PM kisan போன்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பெரும் தொகை செலுத்தப்பட்டு வருகிறது என்று மோடி கூறினார்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.2.5 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். PM-KISAN திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கிடைக்கும்.
2014- க்கு முந்தைய ஐந்து ஆண்டுகளுக்கான மொத்த விவசாய பட்ஜெட் ரூ.90,000 கோடிக்கும் குறைவாக இருந்ததில் இருந்தே இந்தத் தொகை எவ்வளவு பெரியது என்பதை உங்களால் யூகிக்க முடியும் என்றார் மோடி.
வங்கதேசத்தில் ரூ.720-க்கும், பாகிஸ்தானில் ரூ.800-க்கும், சீனாவில் ரூ.2,100-க்கும், அமெரிக்காவில் ரூ.3,000-க்கும் யூரியாவினை பெறும் நிலையில் இந்தியாவில் ரூ.270-க்கு விவசாயிகள் பெறுகிறார்கள் என்று மோடி குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு நியாயமான விலையில் பயிர்ச் சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உர மானியத்திற்காக அரசாங்கம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறிய மோடி, MSP-யை முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் உயர்த்தியுள்ளது என்றும், கடந்த 9 ஆண்டுகளில் MSP-யில் உணவு தானியங்கள் கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளது என்றும் கூறினார்.
உரத் துறைக்கான சமீபத்திய தொகுப்பு ரூ. 3.7 லட்சம் கோடி மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 315 என்ற நியாயமான மற்றும் லாபகரமான விலை (FRP) அதிகரிப்பு குறித்தும் அவர் பேசினார். 2047-க்குள் இந்தியாவை தன்னிறைவு மற்றும் வளர்ந்த நாடாக மாற்றுவதில் கூட்டுறவுகளின் பங்கு குறித்தும் பிரதமர் பேசினார்.
எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சமையல் எண்ணெய்களில் நாடு தன்னிறைவு அடைய உதவுவதற்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
சர்க்கரை துறையில் எத்தனாலை ஊக்குவிப்பதன் மூலம் கரும்பு நிலுவைத் தொகையை குறைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் சர்க்கரை ஆலைகளில் இருந்து ரூ.70,000 கோடி மதிப்பிலான எத்தனால் வாங்கப்பட்டுள்ளது, மேலும் விவசாயிகளின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.20,000 கோடி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
60,000 க்கும் மேற்பட்ட PACS (முதன்மை வேளாண்மை கடன் சங்கங்கள்) கணினிமயமாக்கப்பட்ட நிலையில், அவை இப்போது அந்த தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். கூட்டுறவுகள் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தின் முன்மாதிரியாக மாற வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, டிஜிட்டல் கருவிகளை பெரிய அளவில் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
pic courtesy: narendra modi youtube
மேலும் காண்க:
RD ஆரம்பிக்க சரியான நேரம்- வட்டி விகிதத்தை உயர்த்திய நிதித்துறை!