ஊரடங்கால் திராட்சை பழங்கள் அறுவடை (Harvest) பணி முடங்கி விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் அவற்றை பறிக்காமல், கொடிகளிலேயே அழுக விடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
திராட்சை சாகுபடி
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை அடிவார பகுதிகளான ஜாதிகவுண்டம்பட்டி, வெள்ளோடு, செட்டியபட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை சாகுபடியில் (Graphes Cultivation) ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கவ்வாத்து வெட்டிய நாட்களில் இருந்து 90 நாட்களுக்குள் பழங்களை பறிக்கலாம். 3 ஏக்கருக்கு 4 முதல் 5 டன் வரை பழங்கள் கிடைக்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு திராட்சைகள் அதிகளவு ஏற்றுமதி (Export) செய்யப்படுகிறது. பொதுவாக திராட்சையை விளைவித்து, அதனை சந்தைப்படுத்துவது வரை விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிட்டது. தொடர்மழை பெய்தால் பழங்கள் கொடியிலேயே அழுகி போகும். இதைத்தவிர செவட்டை, சாம்பல் நோய் போன்ற நோய்களும் தாக்கும். இவற்றை எல்லாம் தாண்டி தான், திராட்சை பழங்களை பறித்து விவசாயிகள் சந்தைப்படுத்துகின்றனர்.
விவசாயிகளுக்கு நஷ்டம்
கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கின் (Corona Curfew) போது, திராட்சை பயிரிட்ட விவசாயிகள் பழங்களை பறிக்க முடியாமல் கொடிகளிலேயே அழுக விட்ட சம்பவம் அரங்கேறியது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு கடனாளிகள் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் அதன்பிறகு நிலைமை சீரானதும், அடுத்த போகம் விளைவித்த திராட்சை பழங்களை பறித்து அனுப்பும் பணி தொடங்கியது. விற்பனையும் சூடுபிடித்தது. இதனால் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ. 70 வரை திராட்சை பழங்களை விவசாயிகள் விற்பனை செய்தனர்.
தற்போது கோடைகாலம் என்பதால், திராட்சையின் பயன்பாடு அதிக அளவு இருக்கும் என்பதாலும், நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல, மீண்டும் கொரோனாவின் கோரத்தாண்டவம் அரங்கேறியது. மீண்டும் ஊரடங்கு அமல் தலைவிரித்தாடும் கொரோனாவின் 2-வது அலையால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொத்துக் கொத்தாய் காய்ந்து தொங்கும் திராட்சை பழங்களை பறித்து விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அவைகளை கொடிகளிலேயே அழுக விடும் பரிதாப நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
குறிப்பாக சின்னாளப்பட்டி அருகே உள்ள தொப்பம்பட்டி பகுதியில் ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்ட திராட்சைகள் கொடிகளிலேயே அழுகி கொண்டிருக்கின்றன. பன்னீர் திராட்சையை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
எனவே இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு திராட்சை பழங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு (Compensation) வழங்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் படிக்க
அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கால்நடைகளுக்கு கோடை கால தீவனப் பற்றாக்குறையைப் போக்க மர இலைகள்! கால்நடை மருத்துவர் யோசனை