இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்று புனித ஹஜ் பயணம். இஸ்லாமிய மாதங்களின் கடைசி மாதமான துல்ஹஜ் மாதம் தான் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டிய மாதம். இம்மாதத்தின் ஒன்பதாவது நாள் அரஃபா நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சென்றுள்ள அத்தனை இஸ்லாமியர்களும் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். இந்நாளில் உலகின் இதர பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து பிரார்த்திக்கின்றனர். துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாளில் தான் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. துல்ஹஜ் மாதத்தின் முதல் நாள் பிறைக் கண்டது முதல் குர்பானி பிராணியை அறுத்து பலியிடும் வரை குர்பானி கொடுக்கும் நபர் ரோமம் மற்றும் நகங்களை வெட்டி கொள்ளக் கூடாது.
ஹஜ் கடமையே இஸ்லாமியர்களின் ஆன்மீகத் தந்தையாகப் போற்றும் இப்ராஹிம் எனும் இறைத்தூதர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் (மனைவி ஹாஜரா மற்றும் மகன் இஸ்மாயில்) தியாகத்தைப் போற்றும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது. இஸ்லாமிய மத வழக்கப்படி இறைத்தூதர்களுக்கு கனவுகளின் வழியாகவே இறை உத்தரவுகள் வரும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத இப்ராஹிம் ஹாஜரா தம்பதியினருக்கு இஸ்மாயில் எனும் ஆண் குழந்தை பிறக்கிறது. ஒருநாள் தனது ஆசை மகனை அறுத்து பலியிடுமாறு கனவுக் காண்கிறார் இப்ராஹிம். இறை உத்தரவாக இருக்கும் என்பதால் தனது மகனை பலியிட முடிவு செய்து காட்டிற்கு அழைத்து செல்கிறார். இறை உத்தரவு என்பதால் மகனும் மனைவியும் இந்த முடிவை ஏற்கின்றனர். ஆனால், இப்ராஹிம் தனது மகனின் கழுத்தை அறுக்க முயன்ற போது கத்தி அறுக்க மறுக்கிறது. அப்போதுதான் வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் சொர்க்கத்தில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்றோடு உலகிற்கு வந்து இறைவன் தங்களை சோதிக்கவே இப்படி செய்தான். நரபலி இறைவனின் நோக்கமில்லை இந்த ஆட்டை இறைவனுக்காக அறுத்து பலி கொடுங்கள் என்று இப்ராஹிமிடம் ஆட்டைக் கொடுத்தார். அவரும் அப்படியே செய்தார்.
அறுத்து பலியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பிராணிகள் ஆடு, மாடு மற்றும் ஒட்டகை. அறுத்து பலியிடும் பிராணி எந்த ஊனமும் இன்றி காயங்கள் இன்றி இருப்பது அவசியமான ஒன்றாகும்.
இதில் ஆட்டினை தனி நபராகவும் மாடு மற்றும் ஒட்டகத்தினை ஏழு பேர் சேர்ந்து கூட்டாகவும் குர்பானி எனும் இக்கடமையினை நிறைவேற்றுகின்றனர். இந்த குர்பானி இறைச்சியை மூன்று சம்பாகங்களாக பிரித்து ஒரு பங்கை குடும்பத்தினர் எடுத்துக் கொள்கின்றனர். ஒரு பங்கை உறவினர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழை எளிய மக்களுக்கும் பகிர்ந்துக் கொடுத்து மகிழ்கின்றனர்.
பிராணியின் தோலை இஸ்லாமிய கல்வி நிறுவனங்களுக்கு தானமாக கொடுக்கின்றனர். கால்நடைகளை மையமாகக் கொண்ட திருநாள் என்பதால் இந்தியாவின் விவசாயிகள் ஏராளமானோர் பயன் பெறுகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல ஆயிரம் கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனையாகி இருப்பதில் இருந்து இதனை அறியலாம். தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகைக்கு அடுத்த இரண்டு நாட்களும் இந்த கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி குர்பானியை நிறைவேற்றும் இந்த மூன்று நாட்களில் தான் ஹஜ் கடமையின் மிக முக்கியமான கடமையான சைத்தானுக்கு கல் எறியும் கடமையை நிறைவேற்றுகின்றனர். சைத்தானுக்கு கல் எறியும் கடமையோடு ஹஜ்ஜை முடித்து விட்டு தாயகம் திரும்புவர்.
துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாளில் தான் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. துல்ஹஜ் மாதத்தின் முதல் நாள் பிறைக் கண்டது முதல் குர்பானி பிராணியை அறுத்து பலியிடும் வரை குர்பானி கொடுக்கும் நபர் ரோமம் மற்றும் நகங்களை வெட்டி கொள்ளக் கூடாது.
Alimudeen. S
Madras Veterinary College,
TANUVAS, Chennai.