2021ல் நடைபெற வேண்டிய நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தாண்டு நடத்த திட்டமிட்டுள்ளனர். துல்லியமான மற்றும் செலவு குறைந்த முறையில் நடத்துவதற்காக இதனை 50% மின்னணு முறையில் மாற்ற உள்ளனர். ஒரு நாட்டின் கொள்கை உருவாக்கம் மற்றும் திட்ட செயலாக்கத்திற்கு மக்கள் தொகையின் பல்வேறு வகை தகவல்கள் மிகவும் அவசியம். சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளது. 1872ல் இந்தியாவின் முதல் கணக்கெடுப்பு நடந்தது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census)
1881ல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியானது. அதிலிருந்து தவறாமல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தன. தற்போது நம்மிடம் 2011 மக்கள் தொகை விவரங்களே உள்ளன. 2021ல் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். கோவிட் 2ம் அலையால் அது தள்ளிப்போனது.
மின்னணு முறை (Electronic System)
விரைவில் 16வது கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதனை மின்னணு மற்றும் பேப்பர் என கலப்பு முறையில் நடத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனை சமீபத்தில் அசாமில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். “மக்கள் தொகை கணக்கெடுப்பு காகித முறையிலிருந்து மின்னணு முறையில் மாறுவதற்கான, வரலாற்று முடிவை இந்தியா எடுத்துள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகளை பயன்படுத்தி மக்கள் தொகை கணக்கெடுப்பை விஞ்ஞான ரீதியாக, துல்லியமாக, பல கோணங்களில் உருவாக்க உள்ளோம்.” என்றார்.
இ-சென்செஸ் (E-Census)
மின்னணு மற்றும் காகிதம் என கலப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 30க்கும் மேற்பட்ட நாடுகள் மாறியுள்ளன. கல்வி அறிவு, கணினி அறிவு, அதிக மொபைல் பயன்பாடு கொண்ட மக்களிடையே மின்னணு கணக்கெடுப்பு என்பது எளிது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் கணக்கெடுப்பில் பங்கேற்பதற்கான பிரத்யேக அடையாளம் வழங்கப்படக் கூடும்.
அதனை உறுதிப்படுத்திக் கொண்டு கணக்கெடுப்பில் பங்கேற்க செய்யலாம். உண்மையான நபரா என்பதை சரிபார்க்க அதற்கென நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் அப்பணியை செய்து தருவார்கள். இதற்கான மென்பொருள் உருவாக்கம் போன்றவற்றிற்கு ஆரம்ப முதலீடு இருக்கும். அந்த செலவுகள் நீண்ட கால அளவில் ஈடுகட்டப்படும்.
நன்மைகள் (Benefits)
- மின்னணு கணக்கெடுப்பினால் செலவு பெருமளவு குறையும்.
- மனிதவள தேவை குறைவு.
- பதில்களை தானாக குறிப்பதால் பிழைகள் குறையும்
- துல்லியத்தன்மை கூடும்
- தகவல்களை பிராசஸ் செய்வது விரைவாக முடியும்.
- கடைசி நிமிடங்களில் கூட கேள்விகள் அல்லது வழிமுறைகளில் மாற்றங்களைச் செய்யலாம்.
- ஒரே சமயத்தில் பல லட்சம் பேர் கூட கணக்கெடுப்பில் பங்கேற்கலாம். இதனால் நேரம் மிச்சமாகும்.
மேலும் படிக்க
குடும்ப நிதிப் பிரச்னைகளை தீர்க்க சில வழிகள்!
அமலுக்கு வந்தது 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அரை டிக்கெட் முறை!