மாடுகளை கட்டி போரடித்த காலம் காணாமல் போன சூழ்நிலையில், மதுரை (Madurai) அழகர்கோவில் அருகே புலிப்பட்டி கிராமத்தில் தன் செல்லக்குட்டி 'சுமதி' என்ற யானையை (Elephant) கட்டி போரடித்து வருகிறார் உரிமையாளர் விமலன் மகன் மதன். வித்தியாசமான இவரின் அணுகுமுறை, மதுரையில் பிரபலமாகி வருகிறது. தற்போது நாட்டு மாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால், இவரின் இந்த செயல், மாடுகளின் அவசியத்தை மீண்டும் ஒரு முறை நமக்கு உணர்த்தியுள்ளது.
யானை கட்டி போரடித்தல்
நெல்மணிகளை கதிரிலிருந்து பிரிக்க ஒரு கல்லில் தட்டி உதிர்ப்பதை 'தலையடித்தல்' என்பர். இதில் உதிரும் நெல்மணிகள் விதை நெல்லாக (Paddy seed) அடுத்த போகத்திற்கு பயன்படுத்தப்படும். தலையடியில் உதிராத நெற்களை சேகரிக்க கதிர்களை வட்டமாக பரப்பி மாடுகளை நடக்க வைப்பதை 'சூடடித்தல்'என்பர். இந்த சூடடித்தல் தான் காலப்போக்கில் போரடித்தல் ஆனது. "மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று, யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை" என்ற இலக்கிய பாடலில், மதுரையில் விளைச்சல் அதிகம் என்பதால் போரடிக்க மாடுகள் போதாது என யானைகளை கட்டி போரடித்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய பழக்கத்தை மீட்கும் முயற்சியாக மதுரையில் யானை கட்டி போரடிக்கிறார் மதன்.
பிரபலமான யானை (சுமதி):
ஒரு பழைய திரைப்படத்தில் யானை கட்டி போரடிக்கும் காட்சியை பார்த்ததும், நம் தோட்டத்தில் செய்தால் என்ன என தோன்றியது. உடனே இயந்திரங்களை (Machines) நிறுத்தி விட்டு நான் வளர்த்து வரும் யானையான சுமதியை, போரடிக்க விட்டேன். முதலில் நெற்கதிர்களை (Paddy) சாப்பிட்ட குறும்புக்காரி, பிறகு கதிர்களை சுற்றி நடந்துவர வேண்டும் என சொல்லி கொடுத்த பின் சரியாக செய்கிறாள். 'சுமதி' மேயவிட தனி இடம், மூன்றரை ஏக்கரில் தீவனம் (Fodder) என கண்ணும் கருத்துமாக வளர்க்கிறோம். சுமதி போரடிக்கும் போது சுற்றி நடப்பதால் நடைபயிற்சி செய்வது போல் ஆகிறது. அதில் கிடைக்கும் வைக்கோலும் (Paddy straw) உணவாகிறது. இதை எல்லாம் விட மதுரையின் பாரம்பரிய பெருமை உலகளவில் பேசப்படுகிறது. எங்கள் சுமதி' சமத்தானவள் சொன்ன சொல்லை காப்பாற்றிய பாசக்காரி என அடிக்கடி நிரூபிப்பாள். கூகுள், பேஸ்புக்கில் 'மதுரை சுமதி' என தேடி பார்க்கும் அளவு பிரபலம், என்றார் யானையின் உரிமையாளர் மதன்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயிகளை ஒன்றிணைத்து 5000 ஏக்கரில் முருங்கை விவசாயம் செய்ய இலக்கு!