பெரம்பலூர் மாவட்டம் மாவலிங்கை என்ற கிராமத்தைச் சேர்ந்த மருதரசன் பி.இ படித்துவிட்டு, பெங்களூரில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணி செய்திருக்கிறார். நாம் பிறகொரு நாள் ஊருக்குச் சென்றால் என்ன வேலை செய்வது? என யோசிக்கையில் இயற்கை விவசாயி ஆவோம் என தனக்குத்தானே பதில் கூறி இருக்கிறார்.
அதை இப்போதே செய்தால் என்ன? என யோசித்து, உடனடி செயல்படுத்தத் தொடங்கிவிட்டார். இன்ஜினியரிங் டூ இயற்கை விவசாயம்… எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? எனக் கேட்டதும், விவசாயம்தான் என்னோட பேக்ரவுண்ட் என தனது கதையைப் பேசத் தொடங்கினார் மருதரசன். “
எங்கள் ஊர் விவசாயத்திற்கு பேர்போன ஊர். தினசரி வருமானம் தரக்கூடிய காய்கறிகளில் இருந்து போகத்திற்கு போகம் வருமானம் தரக்கூடிய நெல் சாகுபடி வரை அனைத்து வித விவசாயமும் நடக்கும். இதுபோக, மானாவாரிப் பயிர்கள் அனைத்துமே செழிப்பாக விளையும். மலைப்பயிர்களைத் தவிர மற்ற அனைத்து விதமான பயிர்களும் எங்கள் ஊர்நிலத்தில்வளரும். இத்தகைய ஊரின் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் சிறு வயதிலே விவசாயம் எனக்கு பரிட்சயம்.
விடுமுறை நாட்களில் அப்பாவோடு வயலில் வேலை பார்த்தபடிதான் படிக்கவே செய்தேன். எஞ்சினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் 13 வருடங்கள் வேலை பார்த்தேன். அங்கு வேலை பார்க்கும்போதே எனக்கு ஊர் ஞாபகமும், ஊரிலே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அடிக்கடி எழும். இதற்குக் காரணம் எனக்கு சிறுவயதிலேயே உருவான விவசாய ஆர்வம்தான். இந்த ஆர்வம் என்னை ஊருக்கு வந்து விவசாயம் பார் எனக் கட்டளையிட்டது.
உணவு சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்கிறோம். அதனால் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு நஞ்சில்லா விவசாயமான இயற்கை விவசாயத்தைத்தான் மேற்கொள்ள வேண்டும் என உறுதியாக இருந்தேன். எனது அப்பா இன்னும் விவசாயம்தான் செய்கிறார்.
ஆனால் அவர் செய்வது ரசாயன விவசாயம். அதனால் நான் தனியாக குத்தகைக்கு இடம் வாங்கி இயற்கை விவ சாயம் செய்கிறேன்.ஆரம்பத்தில் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் நாட்டுக் காய்கறிகள் பயிரிட்டேன். வெண்டை, கத்தரி, சின்ன வெங்காயம் என அனைத்துப் பயிர்களையும் சாகுபடி செய்தேன். பின்னர் மேலும் கூடுதலான நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து பயிரிட ஆரம்பித்தேன்.
இப்போது மொத்தமாக 15 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறேன். என்னளவில் இயற்கை விவசாயம் என்றால் எந்த விதமான இடுபொருட்களும் கொடுக்காமல் அதன் தன்மையிலே வளர்த்து அறுவடை செய்வதுதான். அதற்கு மண்ணை செயற்கை உரங்கள் ஏதுமிடாமல் அதன் இயல்புக்கு இயற்கையாகவே விடுவதுதான். அப்படி செய்தாலே போதும். மண்ணுக்குத் தேவையான சத்துகள் பெருகிவிடும். அப்படித்தான் இதுவரை அனைத்து வகையான பயிர்களையும் விளைவிக்கிறேன்.
தற்போது 5 ஏக்கரில் மானாவாரிப் பயிர்கள் விதைத்திருக்கிறேன். நாட்டுத்துவரை, நாட்டுக்கம்பு, கொள்ளு, கொத்தமல்லி, தினை, குதிரைவாலி, எள் என பல பயிர்களை மானாவாரி முறையில் பயிரிட்டு இருக்கிறேன். இந்த மானாவாரிப் பயிர்கள் வளரும் வயல்களுக்கெல்லாம் நான் விதைக்கும்போது சென்றதோடு சரி, அதற்கடுத்து அதன் வளரும் பருவத்தை மட்டுமே கண்காணிப்பேன். அதற்கு உரமோ, நீரோ கொடுப்பது கிடையாது.
மண்ணில் இருக்கிற சத்துகள் மற்றும் நீர்ச்சத்தைக் கொண்டே வளர்ந்துவிடும். 4 ஏக்கரில் பல வகையான பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு வருகிறேன். விதை நெல் அனைத்தையும் எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் இருந்து வாங்கிப் பயிரிட்டேன். தற்போது எனக்குத் தேவையான அனைத்து விதமான விதைகளும் என்னிடமே இருப்பதால், அவற்றைக் கொண்டு மட்டுமே பயிர் செய்கிறேன். இந்த 4 ஏக்கரில் கருப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, கள்ளி மடையான், காலாபாத், காலாநமக் போன்ற ரகங்களைப் பயிரிட்டிருக்கிறேன்.
இவை அனைத்துமே இயற்கை முறை விவசாயம்தான். அதாவது, ஒரு பயிரை அதன் போக்கிலே வளர்த்து அறுவடை செய்வது. நிலத்தைத் தயார் செய்து நீர் கொடுப்பது மட்டுமே என் வேலை. அதன்பின், பயிர்கள் அதன் போக்கில் வளர்ந்துவிடும். இத்தனை ஆண்டுகளும் இப்படித்தான் நான் விவசாயம் செய்து வருகிறேன். இந்த விவசாய முறையிலேயே எனக்கு நல்ல மகசூல் கிடைக்கிறது.எனது விளைபொருட்கள் அனைத்தும் இயற்கை முறையில் உருவானது என்பதால், அவற்றை விற்பனை செய்வதற்காக நானே தனியாக இயற்கை அங்காடி ஒன்றைத் தொடங்கி இருக்கிறேன்.
இதனால் எனக்கு கூடுதல் லாபமும் நிலையான வருமானமும் கிடைக்கிறது. இதுபோக என்னிடம் விளையும் அனைத்துப் பொருட்களையும் நானே மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறேன். எள்ளை மதிப்புக்கூட்டி நல்லெண்ணெய் தயாரிக்கிறேன். கடலையை மதிப்புக்கூட்டி கடலை எண்ணெய் தயாரிக்கிறேன். இதேபோல அனைத்து வகையான எண்ணெய் வித்துப் பயிர்களும் எங்கள் நிலத்தில் விளைகின்றன. அவற்றை மதிப்புக்கூட்டி எண்ணெயாக மக்களிடம் நேரடியாக விற்பனை செய்கிறேன்’’ என மகிழ்வுடன் கூறுகிறார் மருதரசன்.
இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதால் உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான விலை கிடைக்கிறது. சந்தையில் எந்தப் பொருளின் விலையும் ஏற்ற இறக்கம் காணும். ஆனால் இயற்கை விளைபொருட்களுக்கு ஒரே மாதிரியான விலை கிடைக்கும்.இதனால், நிலையான வருமானமும் சரியான லாபமும் கிடைக்கிறது.
இயற்கை விவசாயத்தில் மிகவும் முக்கியமான ஒன்று பட்டம் அறிந்து பயிர் செய்வதுதான். அதேபோல், பயிரிடப்படும் விதைகள் தரமானதாக இருக்க வேண்டும். இவை சரியாக இருந்தாலே இயற்கை விவசாயத்தில் சாதிக்கலாம்.
Read more: