கோவையில் உள்ள தனியார் விடுதியில் தொழில் அதிபர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கலந்துரையாடலில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 33 தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், கொடிசியா, கோசிமா, சியா, சீமா காட்மா, காஸ்மோபேன், கோப்மா, கவுமா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விவாதத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறுதொழில் துறை அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த கலந்துரையாடலை தொடங்கி வைத்து தொழில்முனைவோர் மத்தியில் பேசினார்.
அப்போது, தொழில் நிறுவனம் நடத்துவதன் மூலமாக பொருளாதார சேவை செய்வது தொடர வேண்டும் என தொழில் முனைவோரிடம் கேட்டுக்கொண்டார். கோவை இதமான தட்பவெட்பமும், குளிர்ச்சியும் கொண்டது எனவும், கோவை மக்களின் செயல் பாடுகளிலும் இது தெரியும் என தெரிவித்த அவர், ஜவுளி, பொறியியல், தங்கநகை, பம்ப் உற்பத்தி என அனைத்து தொழில்களிலும் சிறந்து விளங்கும் நகரம் கோவை எனவும் இங்கு தொழில் துறை தொடாத துறைகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
வெட்கிரைன்டர் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, தகவல் தொழில் நுட்ப துறையில் சென்னைக்கு அடுத்த படியாக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோவை இருக்கிறது என தெரிவித்த அவர், இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்று முதலீட்டாளர் மாநாடு 5 முறை நடைபெற்றுள்ளது எனவும் தெரிவித்தார். கோவை மாநகர வளர்ச்சிக்கு, மேற்கு மண்டல வளர்ச்சிக்கு விமான நிலைய விரிவாக்கம் அவசியம் என தெரிவித்த அவர், கோவை விமான நிலையத்தை உலக தரத்திற்கு உயர்த்தும் பணி கருணாநிதி முதல்வராக இருக்கும் போது துவங்கியது என தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எந்த முன்னேறம் இல்லாத நிலையில் தற்போதைய அரசு பதவி ஏற்றபின் விமான நிலைய விரிவாக்க பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது எனவும், இதற்காக 1,332 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் விரைவில் பணிகள் முடிக்கப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார். மேலும், பன்னாட்டு விமான நிலையமாக கோவை விமான நிலையம் மாற்றப்பட இருக்கின்றது என தெரிவித்த அவர், விண்வெளி , ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் வளர்ச்சியடைந்து தொழில் துறையின் ‘நியு ஹப்பாக’ கோவை உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கோவையின் கட்டமைப்பு தேவைகளை நிறைவேற்றும் விதமாக நியூ மாஸ்டர் பிளான் வெளியிடப்படும் என தெரிவித்த முதலமைச்சர், சிட்கோ, சிப்காட் போன்ற அரசு பொது துறைகள் மூலம் பல்கலைகழகங்களில் அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்பட்டு தொழில் வளர்ச்சி மேம்படுத்தபட இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்த அவர், இந்த அரசு ஆட்சிபொறுப்பேற்ற பின் 69,325 கோடி முதலீட்டில் 2லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக 131 புரிந்துணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தொழில் வளர்ச்சி அகில இந்திய அளவில் தொடர கோவை தொழில் துறையினர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசு ஏற்படுத்தியவசதி வாய்ப்புகளை தொழில் துறையினர் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். சிறு, குறு நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக இந்த அரசு தனி கவனம் செலுத்தி வருவதாகவும், இதற்காக 360 கோடி ஓதுக்கப்பட்டு 3,000 மேற்பட்ட தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது எனவும் சிறுதொழில் முனைவோருக்கு தொழில் மனைகளை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெழிவித்த அவர்5 மாவட்டங்களில் புதிய தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தொழில் நலனை பாதுகாப்பதில் இந்த அரசு கவனத்துடன் செயல்படுகின்றது என தெரிவித்த மு.க.ஸ்டாலின், கயிறு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கின்றது எனவும், கயிறு தொழிலை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறிய அவர், மண்டல அளவில் புத்தொழில் மையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும், ஈரோட்டில் மண்டல புத்தொழில் மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மின்னணு சாதன உற்பத்தியில் கோவை சிறந்து விளங்குகின்றது என தெரிவித்த முதலமைச்சர், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், குறிப்பாக ‘சிப்’ தயாரிக்கும் தொழிலில் சீனா, தைவான் உள்ளிட்ட வெளிநாடுகள் முன்னணியில் உள்ள நிலையில் அந்த ‘சிப்’ தயாரிப்பில் தமிழக தொழில் முனைவோர் கவனம் மேற்கொண்டு தொழில்வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நூல் விலை உயர்வு பஞ்சாலை துறையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது, பலர் தொழிலை நடத்த முடியாமல் இருக்கின்றனர் என தெரிவித்த அவர், இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு சென்றுள்ளது எனவும், திமுக நாடாளுமன்ற குழு துணை தலைவர் கனிமொழி தலைமையில் தமிழக எம்.பி.க்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பியூஸ்கோயல் ஆகியோரை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
பஞ்சாலை துறையினரின் கவலைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகின்றது என தெரிவித்த முதலமைச்சர், அதிக முதலீடுகளை செய்து தயாரிப்புகளை தொழில் முனைவோர் மேற்கொள்ள வேண்டும் எனவும், தமிழகம் பன்முனை பொருளாதாரமாக உயர வேண்டும் என தெரிவித்த அவர், வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்களை தொழில் முனைவோர் உள்வாங்கி செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். உற்பத்தி, ஏற்றுமதி, பொருளாதார வளர்ச்சி ஆகியவை வளர்ச்சிக்கு முக்கியமானது என தெரிவித்த அவர், மாநிலத்தை தொழில் வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் தொழில் முனைவோர் மத்தியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
164வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு இனங்களை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை