
EPFO ஓய்வூதிய திட்டம் 1995 (இபிஎஸ்-95) திட்டத்தின் கீழ் அதிகபட்ச ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஆன்லைன் மூலம் 1.20 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இன்னமும் கால அவகாசம் இருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதிக ஓய்வூதியம் (Higher Pension)
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி மாநிலங்களவையில் அளித்த பதிலில், அதிகபட்ச ஓய்வூதியத்தைப் பெற EPFO-வின் ஒருங்கிணைந்த ஆன்லைன் தளத்தின் மூலம் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி வரை 1,20,279 விண்ணப்பங்கள் சந்தாதாரர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
மே 3 ஆம் தேதியுடன் இந்த கால அவகாசம் முடிவடைகிறது. மார்ச் 13, 2023 நிலவரப்படி, 2.79 கோடி பேர் வீட்டுப் பணியாளர்களாக ஈஷ்ராம் போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறுவதற்கான ஊதிய உச்ச வரம்பை, 6,500 ரூபாயில் இருந்து, 15,000 ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். மேலும், 2014 செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு முன்னர் பணியில் சேர்ந்த தகுதியுள்ள ஊழியர்களும் இதில் இணைவதற்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 3 ஆம் தேதி கடைசி தேதியாக இருந்த நிலையில், கூடுதல் அவகாசம் அளிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, மே 3 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து, வருங்கால வைப்பு நிதியம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
PF கூடுதல் பென்சன் பெற விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு!