2022-23க்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கணிசமான அளவில் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மார்ச் 2022 இல் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான EPF கணக்கு வட்டி விகிதத்தை 8.1% என ஒன்றிய அரசு நிர்ணயம் செய்தது. இது 1977-1978 க்குப் பிறகு மிகக் குறைந்த வட்டி விகிதமாகும். இந்நிலையில் EPF கணக்கு வட்டி விகிதம் மேலும் சரிவை நோக்கி செல்லுமா என கருதப்பட்ட நிலையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.1% ல் இருந்து 8.15%ஆக அதிகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் சுமார் 7 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 27.73 கோடி இந்தியர்களின் ஓய்வூதிய சேமிப்புகளை நிர்வகிக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது அதானி நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் EPFO இங்கு முதலீடு செய்து வருவது பொது மக்களிடையே அதிருப்தியினை ஏற்படுத்தி இருந்தது.
மார்ச் 2022 வரை ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, நடப்பு 2023 ஆம் நிதியாண்டில் மேலும் ரூ.8,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை பிப்ரவரியில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அதானி பங்குகளில் எல்ஐசி பணம் முதலீடு செய்தது தெரியவந்தது, அதன்பின் பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் எல்.ஐ.சி-யின் பங்குகளை தனியார் வசமாக்கியது விவாத பொருளாக மாறியது.
EPFO 2020-21 ஆம் நிதியாண்டில் EPF கணக்கு வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்ததை , 2021-22 ஆம் நிதியாண்டில் வட்டி விகிதத்தை 8.1 சதவீதமாக குறைத்தது. இது கடந்த 40 ஆண்டில் இரண்டாவது குறைந்தப்பட்ச வட்டி விகிதம் ஆகும். ஒருபுறம் அதானி பங்குகளில் முதலீடு, மறுபுறம் தொடர்ச்சியாக வட்டி விகிதம் குறைப்பு என பயனாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள கணிசமான வட்டி விகிதம் குறைந்த பட்ச நிம்மதியை பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
EPFO அதன் சந்தாதாரர்களுக்கு 2016-17 ஆம் நிதியாண்டில் 8.65 சதவீத வட்டி விகிதத்தையும், 2017-18 ஆம் நிதியாண்டில் 8.55 சதவீதத்தையும் வழங்கியது. 2015-16 ஆம் நிதியாண்டில் வட்டி விகிதம் சற்று அதிகமாக 8.8 சதவீதமாகவும் இருந்தது.
EPFO இன் மத்திய அறங்காவலர் குழு (CBT- Central Board of Trustees) கூட்டத்தின் போது இந்த வட்டி விகித உயர்வு முடிவு எடுக்கப்பட்டது. CBT என்பது EPFO -வின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பிற்கு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
தமிழக அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெற யாரெல்லாம் தகுதி?