மஞ்சள் நம் நாட்டின் முக்கியமான வணிகப் பயிர் என்றாலும், மஞ்சள் கிழங்குகள் மருத்துவ குணங்கள் கொண்டவை. அவை நமது நாட்டு மருத்துவத்தில் தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறந்த நுண்ணுயிர்க்கொல்லியாக விளங்கும் மஞ்சள், கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு கிருமி நாசினியாகவும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் எளிதில் கிடைகின்றன. இதிலுள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை தருகிறது.
மஞ்சள் உற்பத்தி
உலக அளவிலான மஞ்சள் உற்பத்தியில், 91 சதவீத மஞ்சள் இந்தியாவில் தான் விளைகிறது. ஆண்டுக்கு 80,000 டன் மஞ்சள் இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இதில் 30 சதவீத்திற்கு மேல் ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. பெண்கள் முக அழகுக்காக பயன்படுத்தப்படும் விரலி மஞ்சள் இங்கு தான் அதிக அளவில் உற்பத்தியாகிறது.
மஞ்சளின் வகைகள் (Major varieties of Turmeric in India)
முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள், என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. இதில், "ஆலப்புழை மஞ்சள்" உலகிலேயே சிறந்த மஞ்சளாக கருதப்படுகிறது. விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களை குறைந்த வலையில் இந்த மஞ்சள் தருவதால் ''ஏழைகளின் குங்குமப் பூ'' என்றும் அழைப்படுகிறது.
இந்திய மஞ்சள் சந்தையில் ஈரோட்டின் பங்கு
இந்தியாவை பொருத்தவரை தெலுங்கனா மாநிலம், நிஜாமாபாத், மஹாராஷ்டிர மாநிலம், சாங்கிலி தமிழகத்தில் ஈரோடு என மூன்று இடங்களில் தான் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தை அமைந்துள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் விளையுப் மஞ்சளில் தான் "குர்குமின்" எனப்படும் வேதிப் பொருள் அதிகம் காணப்படுகிறது. ஈரோடு மஞ்சளில் காணப்படும் குர்குமின் அளவு 3 முதல் 5 சதவீதம் வரை உள்ளதாக வேளாண் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தேசிய அளவிலான மஞ்சள் சந்தையில், ஈரோடு மஞ்சளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இங்கு சாகுபடி செய்யும் மஞ்சளின் நிறம், சுவை, மணம் வேறுப்பட்டதாகவும் இருக்கும், இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஈரோடு மஞ்சளுக்கு கடந்த 2019ம் ஆண்டு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏழைகளின் கிருமி நாசினி ''மஞ்சள்''
உலகம் முழுதும் கோர தாண்டவமாடும் கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக்கொள்ள கிருமிநாசினியை பயன்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆல்கஹால் சானிடைசர், ஆலிவெரா சானிடைசர் போன்ற ஆங்கில மருந்துகள் எட்டிப்பார்க்காத கிராமங்களில் இயற்கை கிருமி நாசினியாக கருதப்படும் மஞ்சளை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதன் தேவையை அறிந்தகொண்ட மக்களும் மஞ்சளை அதிகம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மஞ்சள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
குர்குமின் மற்றும் ஆய்வகங்கள்
மஞ்சளின் நடுப்பகுதியில் இளஞ்சிவப்பு நிற சதைப்பகுதியில் 'குர்குமின்' என்ற வேதிப்பொருள் இருப்பதாகவும், இந்த குர்குமின் அளவே கிருமியை ஒழிக்கும் தன்மை உடையது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, குர்குமின் அளவை பொறுத்தே சந்தையில் மஞ்சளின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், மஞ்சள் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் மஞ்சளில் இருக்கும் குர்குமின் அளவை அறிய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விவாசயிகளுக்கு உதவும் வகையில், தமிழக அரசு ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் மற்றும் பெருந்துறை ஆகிய பகுதிகளில் இரண்டு வேளாண் ஆய்வகங்களை நிறுவியுள்ளது. இந்த இரு ஆய்வகங்களிலும் மஞ்சள் விவசாயிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விவசாயிகள் கொண்டு வரும் மஞ்சளில், 250 கிராம் மஞ்சள் மாதிரி எடுக்கப்பட்டு அதை அரைத்து, 'ஹாட் ஏர் அவன் (Hot air ovan)' என்ற கருவி மூலம், விஞ்ஞானிகள் மஞ்சளை ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். பின்னர், 'ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர்' கருவி மூலம், மஞ்சளின் குர்குமின் அளவு பரிசோதிக்கப்பட்டு அதன் விபரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில், ரோமா, ஸ்வர்ணா, பிரகதி மற்றும் உள்ளூர் ரக மஞ்சள்களை, விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். உள்ளூர் மஞ்சளின் குர்குமின் அளவு சராசரியாக, 3.2 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Daisy Rose Mary
Krishi Jagran