கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 7ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ள ஓட்டுப்போட முயன்றதாக ஒருவரைப் பிடித்து சட்டையைக் கழற்றி சாலையில் இழுத்துச் சென்ற விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. அப்போது சென்னை மாநகராட்சி 46வது வார்டுக்கு உட்பட்ட ராயபுரம் சஞ்சீவி ராயன் கோவில் தெரு ஓட்டுச் சாவடியில் சிலர் கள்ள ஓட்டுப்போட முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தன் கட்சியினருடன் அங்கு சென்றார். அங்கிருந்த நரேஷ் 45 என்பவரை பிடித்து விசாரித்தார். இவர் தி.மு.க. தொண்டர் என கூறப்படுகிறது. ஜெயகுமாருடன் சென்றவர்கள் நரேஷின் சட்டையை கழற்றி அதைவைத்தே கைகளை பின்பக்கமாக கட்டினர்.
பின்னர் அவரை அடித்து இழுத்துச் சென்று தண்டையார்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். இந்த 'வீடியோ' சமூக வலைதளத்தில் வெளியாகின.அ.தி.மு.க.வினரின் தாக்குதலில் காயமடைந்த நரேஷ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகார்படி ஜெயகுமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு 8:30 மணிக்கு ஜெயகுமார் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நள்ளிரவு 12:00 மணியளவில் சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளி கிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தனர்.
ஜெயக்குமாரை மார்ச் 7-ம் தேதி வரை (15 நாள்) நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெயக்குமார் கைது சம்பவத்திற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
புழக்கத்தில் போலித் தங்கம்- தரத்தைப் பரிசோதிக்க எளிய வழிகள்!
ஆயிரக்கணக்கான டாஸ்மாக் கடைகள் மூடல்-மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி!