வரவிருக்கும் பட்ஜெட்டில், விவசாய துறைக்கு கூடுதல் நிதி மற்றும் ஊக்கத் தொகைகளை அரசு வழங்க வேண்டும் என, துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வேளாண் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, பண்ணை ஆராய்ச்சி, எண்ணெய் வித்து உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், இயற்கை வேளாண்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் நிதி மற்றும் ஊக்கச் சலுகைகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அத்துடன், விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்குவதை விட, நேரடி மானிய உதவித் தொகை திட்டத்தின் (the Direct Grant Scheme) மூலம் உதவிகள் செய்வது அதிக பலனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் வங்கி கணக்குகளில், ஆண்டுதோறும், 6,000 ரூபாய் நேரடியாக செலுத்துவது பயன் அளிப்பதாக இருக்கிறது. இந்த முறையை, மற்ற சலுகை திட்டங்களிலும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
புதிய தலைமுறை உரங்கள்
டி.சி.எம்., ஸ்ரீராம் நிறுவனத்தின் தலைவர் அஜய் ஸ்ரீராம், விவசாயிகளுக்கு சலுகைகளை அறிவிப்பதை விட, அவர்களுக்கு நேரடியாக பணத்தை கொடுக்கும் போது, அதை அவர்கள் தேவையானவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். நல்ல விதை, புதிய தலைமுறை உரங்கள் (New generation fertilizers), நீரை சிக்கனமாக பயன்படுத்துவது என தேவையானவற்றை செய்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
ஆலோசனை நிறுவனமான, ‘டெலாய்ட் இந்தியா ஆராய்ச்சி (Deloitte India Research)' மற்றும் மேம்பாட்டுக்கு அதிகமான நிதி ஒதுக்க வேண்டும் என்றும், சமையல் எண்ணெயை இறக்குமதி செய்வதை குறைத்து, உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்வதை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
வரிச்சலுகை:
‘ஆர்கானிஷ் ஓவர்சீஸ் (Organic Overseas)' நிறுவனத்தின் நிறுவனர், இயற்கை வேளாண்மையில், தனியார் நிறுவனங்கள் அதிகம் இடம்பெறும் வகையில், வரிச் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். குளிர் பதன வசதிகள், சேமிப்பு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தவும் சலுகைகள் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்து உள்ளார். இத்துடன், டீசல் மீதான வரி குறைப்பு, காய்கறி மற்றும் பழங்களுக்கு போக்குவரத்து மானியம் (Transportation subsidy) ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மக்காச்சோள கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்!
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச Wi-Fi வசதி! டெல்லி முதல்வர் அசத்தல்!