மாறிவரும் காலநிலைகளுக்கு ஏற்ப புத்திசாலித்தனமான பண்ணை நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவை விவசாயத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க உதவும்.
அதே வகையில் அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நீர் மற்றும் உணவுத்தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் விவசாயம் தொடர்பான கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அவசியம் தேவை.
உழவு செய்யும் நடைமுறை, மேம்படுத்தப்பட்ட சாகுபடி மற்றும் தாவர வளர்ப்பு தொழில்நுட்பங்கள், நுண்ணீர் பாசனம் போன்ற புதுமையான நீர்ப்பாசனம் மற்றும் நீர் மேலாண்மை முறைகளை கடைப்பிடிப்பதை விவசாயிகள் உறுதி செய்ய வேண்டும்.
பருவநிலை மாற்றம் விவசாயம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாகும். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் அடங்கிய இந்தியாவின் வடமேற்கு சமவெளிகளில் ஒழுங்கற்ற மற்றும் தீவிர மழைப்பொழிவுடன் நிலவும் அதிக வெப்பநிலைக்கு முக்கிய காரணங்களாக திகழ்பவை தொழில்மயமாக்கல், காடுகள் அழிப்பு, புதைபடிவ எரிபொருட்களின் அதிகரித்த பயன்பாடு மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பும் அடங்கும்.
மேற்குறிப்பிட்ட பகுதியில் 2022-ல் அசாதாரணமாக உயர்ந்த பிப்ரவரி-மார்ச் மாத வெப்பநிலை மற்றும் 2023-ல் பெய்த அகால மழை காரணமாக கோதுமை உற்பத்தித்திறன் வெகுவாக குறைந்தது. காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இது விளங்குகிறது.
பாதிப்புக்குள்ளான கோதுமை உற்பத்தி:
பருவநிலை மாற்றம் பஞ்சாபில் விவசாய உற்பத்தி முறைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கோதுமை பயிரின் இனப்பெருக்க வளர்ச்சிக் காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை, ஈரப்பதம், மழைப்பொழிவு மற்றும் மழை நாட்களின் எண்ணிக்கை ஆகியவை அதிக தானிய விளைச்சலுக்கு சாதகமாக உள்ளன.
பஞ்சாபில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை (minimum and maximum temperature) அதிகரித்து வருகிறது. பருவகால குறைந்தபட்ச வெப்பநிலை மாறுபாடு மற்றும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் வெப்ப அழுத்தத்திற்கான ஆபத்தினை பஞ்சாப் எதிர்க்கொள்கிறது. வெப்ப அழுத்தத்தின் காரணமாக அதிகரித்து வரும் வெப்பநிலை கோதுமை விளைச்சலை 10-28% குறைக்கலாம். ஹரியானாவிலும் இதே நிலைதான் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பஞ்சாபின் மக்கள் தொகையில் 80%-க்கும் அதிகமான மக்களுக்கு குடிநீரின் முதன்மை ஆதாரமாக நிலத்தடி நீர் உள்ளது. நிலத்தடி நீரின் அளவு மற்றும் தரத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிகப்பெரியது. சமீபத்திய ஆண்டுகளில் ஒழுங்கற்ற மழைப்பொழிவு, கடந்த பத்தாண்டுகளில் நிலத்தடி நீர் தட்டுபாடு அதிகரித்து வரும் போக்கைக் காட்டியுள்ளது.
எதிர்காலத்தில் நீர்ப்பாசனத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, நீர் மற்றும் உணவு உற்பத்தி மற்றும் விநியோக முறைகளை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் மற்றும் நீடித்து நிலைத்திருக்கவும் நாம் இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக வேளாண் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
pic courtesy: Unsplash
மேலும் காண்க: