தமிழகத்தில், முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அறிவித்த சில தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, மே 24 முதல், இன்று காலை, 6:00 மணி வரை, தளர்வுகளற்ற முழு ஊரடங்கை (Full Curfew) அரசு நடைமுறைப்படுத்தியது. மக்களின் விலை மதிப்பற்ற உயிர்களை காக்க, வரும் 14ம் தேதி காலை, 6:00 மணி வரை, முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இன்று முதல் சில தளர்வுகளும் அமலுக்கு வந்துள்ளது.
அனுமதி
முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், இன்று முதல் தினமும் காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மீன் சந்தைகள், இறைச்சி கூடங்கள், மொத்த விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளன. அனைத்து அரசு அலுவலகங்களும், இன்று முதல் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். நோய் தொற்று அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குவோர், தச்சர் போன்ற சுய தொழில் செய்வோர், காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை, 'இ - பதிவு'டன் (E-Registration) பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
இ-பதிவு கட்டாயம்
மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்ச்கள், ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள், 'ஹார்டுவேர்' கடைகள், காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் பயணியர், இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. வாடகை டாக்சிகளில், டிரைவர் தவிர மூன்று பயணியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் டிரைவர் தவிர இரண்டு பயணியர் மட்டும் செல்லலாம்.
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில், இ-பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசின் இம்முயற்சி நிச்சயம் பலன் அளிக்கும்.
மேலும் படிக்க
கொரோனா 3-ம் அலையை, வருமுன் தடுக்க சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!
+2 தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது தமிழக அரசு!