விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் கொப்பரை கொள்முதல் காலம் இந்த மாதம் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவத்துள்ளார்.
இது தொடர்பாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளதாவது:
விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழக அரசு அனைத்து உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
தற்போது அரவை கொப்பரையின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்தது.
இதைத்தொடா்ந்து தஞ்சாவூா் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தின் மூலம் 853.180 டன்களும், பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் 1,642 டன்களும் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்று க்கு ரூ. 105.90 விலையில் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. கொப்பரை கொள்முதல் காலம் பிப்ரவரி 2ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை என நடைமுறையில் இருந்த நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் இந்த மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொப்பரைக்கான கிரய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் குறைந்தபட்ச தரத்தினை பரிந்துரை செய்துள்ளது.
அதன் அடிப்படையில் அரவை கொப்பரையின் குறைந்தபட்ச தரம் அயல் பொருட்கள் 1 சதவீதமும், பூஞ்சானம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதமும், சுருக்கம் கொண்ட கொப்பரை 10 சதவீதம், சில்லுகள் உடைபாடு 10 சதவீதம் மற்றும் ஈரப்பதம் 6 சதவீதம் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: