தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
ஒத்துழைக்க மறுப்பு (Refusal to cooperate)
இந்தியாவில் தற்போது 3-வது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. எனவே இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு மற்றும் பல்வேறுக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், மக்களிடையே ஒருமித்த ஒத்துழைப்பு இல்லை.
உணராதவர்கள் சிலர், அரசின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தங்கள் போக்கில் இருக்கிறார்கள்.
அபராதம் அதிகரிப்பு (Increase in fines)
இதனால் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவதுடன், அபராதத்தையும் அதிகரிப்பது நல்ல பலன் கொடுக்கும் என அதிகாரிகள் நினைக்கின்றனர்.
இதற்காக பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையில் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போலீசார் அதிரடி சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.
ரூ.500
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாமல் செல்வதைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு அபராதத் தொகையினை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. முக கவசம் அணிபவர்கள் வாய் மற்றும் மூக்கை நன்கு மூடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். இதையடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
முகக்கவசம் அவசியம்
கொரோனாவை தடுக்க பொது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னையில் ஏற்கனவே ரயில் நிலையங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...