"கடந்த 10 நாட்களாக பயிர்க்கடன் வாங்க முடியவில்லை. வேறு வங்கிகளில் பயிர்க்கடன் நிலுவையில் இல்லை என்ற சான்று கொடுத்தால் மட்டுமே கடன் கொடுப்போம் என்று கூட்டுறவு வங்கிகள் நெருக்கடி கொடுக்கின்றன. இதனால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை" எனக் கூறுகிறார், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வாழை விவசாயி வேலுசாமி.
பயிர்க்கடன் தொடர்பாக ஜூன் 12-ஆம் தேதி கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையே இதற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆனால், விவசாயிகள் இரு இடங்களில் கடன் பெறுவதால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுவதாகக் கூறுகிறார், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன். என்ன பிரச்னை?
விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதில் என்ன சிக்கல்?
தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கிஷான் கிரடிட் கார்டு (கேசிசி) மூலம் 7 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.
இது தவிர, நகைக்கடன், விசைத்தறி கடன், கால்நடைக் கடன் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதை ஓராண்டு காலத்துக்குள் செலுத்திவிட்டால் வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மே 26-ஆம் தேதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட உத்தரவில், "கூட்டுறவு கடன் பெறும் நபர்களின் சிபில் ஸ்கோர் (CIBIL) அடிப்படையில் கடன் வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குணசேகரன், "கடனை வாங்கிய விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்திய முறைகளைக் அடிப்படையாக வைத்து கடன் தகுதி தீர்மானிக்கப்பட்டால் பெரும்பாலான விவசாயிகளுக்கு கடனே கிடைக்காது" எனக் கூறுகிறார்,
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரிடர்களைத் தாண்டி விவசாயத்தில் முதலீட்டைத் திரும்ப எடுக்கும் வரை ஏராளமான துன்பங்களை விவசாயிகள் அனுபவிக்கின்றனர். எனவே இப்படிப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும்" எனவும் வலியுறுத்தினார்.
கடன் தர மறுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
"சிபில் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கூறுகின்றன. அவ்வாறு சமர்ப்பிக்கும் போது வேறு வங்கிகளில் பயிர்க்கடன் இருப்பது தெரிய வந்தால் கடன் தர மறுக்கின்றனர். இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" எனக் கூறுகிறார், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி வேலுசாமி.
இவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் தென்னை, வாழை ஆகியவற்றை விவசாயம் செய்து வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய வேலுச்சாமி, " தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதிகபட்சம் 3 லட்ச ரூபாய் வரை பயிர்க்கடன் தருகின்றனர். ஓர் ஆண்டுக்குள் கட்டிவிட்டால் வட்டி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறுகிறார்.
பயிர்க்கடன் பெறுவதற்கு பட்டா, சிட்டல், அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, பான் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் உறுதியானதும் விவசாயிகள் அந்தத் தொகையை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பெற்றுக் கொள்கின்றனர்.
பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலான விவசாயிகள் பயிர்க்கடன் பெற்றுள்ளதாகக் கூறும் வேலுச்சாமி, "அங்கு ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கட்டினால் போதும். நான் முறையாக வட்டி செலுத்தி வருவதாக சிபில் ஸ்கோர் கூறுகிறது. ஆனால், எனக்கு வேறு வங்கியில் பயிர்க்கடன் உள்ளதாகக் கூறி கடன் தர மறுக்கின்றனர்" என்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பயிர்க்கடன் பெற முடியாததால் வேளாண்மையில் ஈடுபட முடியாமல் ஏராளமான விவசாயிகள் தவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.