நடப்பாண்டிற்கான (2023-2024 ) வேளாண் பட்ஜெட்டினை தாக்கல் செய்தார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். விவசாயம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், கல்வித்துறையுடன் இணைந்து பண்ணைச்சுற்றுலா மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தது முதலே வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். நெல், கரும்பு கொள்முதலுக்கு ஊக்கத்தொகை என பல்வேறு அறிவிப்புகள் குறிப்பிட்ட நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா, ஊரக இளைஞர்களுக்கு வேளாண் இயந்திரப் பழுது மற்றும் பாரமரிப்பு பணிகள் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுமென என அமைச்சர் தெரிவித்துள்ளார். அவற்றின் முழுவிவரம் பின்வருமாறு-
பள்ளி மாணவர்களுக்குப் பண்ணைச் சுற்றுலா
பாடப் புத்தகங்களில் படமாகவும், ஊடகங்களில் காணொலியாகவும் கண்ட வயல்களை, தோப்புகளை, தோட்டங்களை, பாசனக் கிணறுகளை, பழ மரங்களை,மாணவர்கள் நேரடியாக காண வேண்டுமென்பதற்காகவும், வேளாண்மையின் மகத்துவத்தை அவர்கள் அறிந்து, உணர்ந்து, தெளிந்து, தேற வேண்டுமென்பதற்காகவும், பண்ணைச் சுற்றுலா கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
கான்கிரீட் காடுகளிலிருந்து பெறுகிற விடுதலையாகவும், மரகத வயல்வெளிகளைக் கண்டு பொழுதுபோக்காகவும், உழவர்களின் மகிழ்கிற வியர்வையின் உன்னதத்தைப் புரிந்துகொள்கிற பயிற்சியாகவும், பாடப் புத்தகங்களில் வருகிற வினாக்களுக்கு விளக்கமாகவும், உண்ணுகிற உணவை, உணவின் அருமையை உணரும் மெய்ஞானமாகவும், இந்தப் பண்ணைச் சுற்றுலா மாணவர்களுக்கு அமையும்.
இதுபோன்ற சுற்றுலாக்கள் இயற்கையோடு இயைந்து வாழும் நெறியைக் கற்றுத்தரும். அரிசியும், பருப்பும் தொழிற்சாலைகளில் உற்பத்தியாவதாக நினைத்துக் கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்திற்கு இந்தச் சுற்றுலா விழிப்புணர்வை ஏற்படுத்தும். இத்திட்டம் ஒரு கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.
ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
திறம்பட வாழ, திறன்கள் அவசியம். ஊரகப் பகுதிகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. அவற்றை இயக்கவும், பழுதுபார்க்கவும் திறன்கள் தேவைப்படுகின்றன. உரிய நேரத்தில் வேளாண் இயந்திரங்களை இயக்குவதற்கு திறன்வாய்ந்த ஓட்டுனர்களை உருவாக்குவது அவசியம். டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றை இயக்குவதற்கும், கையாள்வதற்கும் 500 ஊரக இளைஞர்களுக்கு வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய ஆறு இயந்திர பணிமனைகளில் ஒரு கோடி ரூபாய் செலவில் இயந்திரங்களை இயக்குவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
மேலும், வேளாண் இயந்திரங்களைக் காடுகளிலும், மேடுகளிலும் பயன்படுத்துகிற காரணத்தால், அவை அடிக்கடி பழுதாகிற நெருக்கடி நேர்கிறது. வயலில் உழுதுகொண்டு இருக்கிறபோது, இயந்திரக் கலப்பை பழுதானால் உழுகிற பணிக்கு, ஊறு விளைந்து விடும். இதைத் தவிர்க்கும் பொருட்டு, நகர்ப்புரங்களை நாடி வருகிற அந்த இயந்திரங்களை சிற்றூரிலேயே சீர்படுத்துவதற்கு ஊரக இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பது இன்றைய தேவை.
ஊரக இளைஞர்கள் சுய தொழில் தொடங்கும் வகையில் ஆறு அரசு வேளாண் இயந்திரப் பணிமனைகளில் 50 இலட்சம் ரூபாய் செலவில் 200 ஊரக இளைஞர்களுக்கு பழுது நீக்கம், பராமரிப்பு ஆகியவை குறித்த குறுகிய காலப் பயிற்சி வழங்கப்படும்.
மேலும் காண்க:
5 லட்சம் பரிசு, நம்மாழ்வார் விருது- அங்கக விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இனி ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு