தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்திய அளவிலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விளைநிலங்கள் தயார். நிலையில் இருக்கும் போது, மழைப்பொழிவு குறைந்து விடுகிறது. விளைச்சல் அதிகமாக இருந்தால், மழை அதிகளவு பெய்து விளைபொருட்களை நாசம் செய்கிறது. சில நேரங்களில், விளைச்சல் இருந்தும் மிக மிக குறைந்த விலைக்கு விற்கும் அல்ல நிலை ஏற்படுகிறது.
இதனையெல்லாம், சமாளிக்க முடியாமல் இறுதியாக விவசாயிகள் தற்கொலை முடிவை எடுத்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு எப்போது கிட்டும் என்பது கேள்விக்குறி தான். இது ஒருபுறம் இருக்க, விவசாய நிலங்களை போக்குவரத்து பயன்பாட்டுக்காக கையகப்படுத்த முயற்சிக்கிறது அரசு. விவசாய நிலங்கள் தான் இவர்களின் கண்களுக்கு தெரிகிறதா?
விவசாயக் கிணறு (Agriculture Well)
விவசாய நிலங்களை அழிக்காமல் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும். ஆனால், விவசாய நிலங்களையே கையகப்படுத்த நினைப்பதன் விளைவும், விவசாயம் அழிந்து வருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இந்நிலையில், தர்மபுரி அருகே தன்னுடைய சொந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயியால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இவரின் இந்த தற்கொலை முயற்சிக்கும் தமிழக அரசு தான் காரணம்.
தர்மபுரி மாவட்டம், மகேந்திர மங்கலம் அருகே கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சத்யராஜ். இவருக்கு சொந்தமாக ஒரு கிணறு உள்ளது. மழைப்பொழிவு குறையும் நேரங்களில், கிணற்றுப் பாசனம் தான் இவருக்கு கைகொடுக்கிறது. இந்நிலையில் இவருடைய கிணற்றை, தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக அதிகாரிகள் மூட வந்திருந்தனர். அப்போது உரிய இழப்பீடுத் தொகையை கொடுக்காமல் கிணற்றை மூடுவதற்கு, விவசாயி சத்யராஜ் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் 1500 அடிக்கும் கீழே சென்று விட்டது. இதனால், கிணற்றை ஆழப்படுத்தியும், ஆழ்துளை கிணறு அமைத்தும் விவசாயம் செய்து பிழைத்து வருகிறேன். ஆகவே, என்னுடைய கிணற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரினார் விவசாயி சத்யராஜ். இந்தப் பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
தற்கொலை முயற்சி (Suiside Attempt)
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இயந்திரம் மூலம் கிணற்றை மூட முயற்சி செய்தனர். இதனைக் கண்டு ஆவேசமடைந்த விவசாயி சத்யராஜ், தீடீரென கிணற்றில் குதித்து, தற்கொலைக்கு முயற்சி செய்தார். விவசாயி சத்யராஜன் தற்கொலை முயற்சியை அறிந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்தத் தகவலறிந்த பாலக்கோடு காவல் துறையினர், டி.எஸ்.பி.தினகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விவசாயி சத்யராஜூடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய இழப்பீடை பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.
மேலும் படிக்க
உர விற்பனை நிறுவனத்தின் காசோலை மோசடி: தோனி மீதும் வழக்குப் பதிவு!