புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள், குண்டலி-பல்வால் அதிவேக நெடுஞ்சாலைகளை மறித்து சாலை மறியல் போராட்டத்ததில் ஈடுபட்டுள்ளனர். இதனை 24 மணி நேர ஒருநாள் போராட்டமாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து, பல்வேறு கோணங்களில் போராட்டத்தை வலுப்படுத்தப்போவதாகவும் போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
4 மாதங்களாக தொடரும் போராட்டம்
மத்திய பாரதிய ஜனதாக அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்களையும் தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பேச்சுவார்த்தைகள் தோல்வி
இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து முடிவெடுத்துள்ளனர்.
எக்ஸ்பிரஸ் ஹைவேயில் மறியல்
இதைத்தொடர்ந்து, இன்று காலை எட்டு மணி முதல் குண்டலி-மானேசர்-பல்வால் மற்றும் குண்ட்லி-காசியாபாத்-பல்வால் ஆகிய எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளை மறித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் 24 மணி நேரம் (ஒருநாள்) தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மாற்று வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால் நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு தளங்களில் போராட்டம் நடைபெறும்
மேலும், இந்த மாதம் பல்வேறு தளங்களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவுசெய்துள்ளனர். அதன்படி வரும் ஏப்ரல் 13ஆம் தேதி, ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படவுள்ளது. தொடந்து வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு "அரசியலமைப்பு பாதுகாப்பு தினம்" மற்றும் "கிசான் பகுஜன் ஒற்றுமை நாள்" ஆகியவற்றை அனுசரித்து தங்கள் போராட்டத்தை தீவரப்படுத்துவோம் என விவசாயிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்ராசரம் நிறுத்தம் - விவசாயிகள் கவலை!!