மேட்டுப்பாளையத்தில், உயர் தர கத்தரி ரகம் என விற்பனை செய்யப்பட்ட, கத்தரி விதைகளை வாங்கி நடவு செய்த விவசாயிகள், அவை மூன்று மாதங்களாகியும் பூக்கவோ, காய்க்கவோ செய்யாததால்,பெருத்த ஏமாற்றத்துடன் இழப்பைச் சந்தித்துள்ளனர். சில பத்தாண்டுகளுக்கு முன்பு, விவசாயிகள் பெரும்பாலும், அடுத்த சாகுபடிக்கான (Cultivation) விதைகளை தாங்கள் விளைவித்த பயிர்களில் இருந்து எடுத்து, சேகரித்து, விதை நேர்த்தி செய்து பயன்படுத்துவர். ஒருவேளை தங்களின் விதை, போதுமான ராசி வராமல் இருந்தால், அண்டை விவசாயிகளிடம் இருந்து நல்ல ரகத்தை வாங்கி, பயிர் செய்வர். விவசாயிகள் தங்களுக்குள், நாற்றுகளையும், விதைகளையும் பரிமாற்றம் செய்து வந்தனர். உயர் ரக ஒட்டு வகை தானியங்கள் பயன்பாட்டுக்கு வந்தபின்பு, விதை விற்பனை மையங்களை மட்டுமே விவசாயிகள் நம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தரமற்ற விதைகள்
விளைவித்த தானியங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், அவற்றில் மகசூல் (Yield) செய்த தானியங்களை மீண்டும் விதைகளாகப் பயன்படுத்த முடியாது. மீண்டும், அந்த நிறுவனங்களின் விதையைத்தான் வாங்கி, நடவு செய்ய வேண்டும். இந்த விதைகளும் உரிய பலனைத் தரும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, கடனாளியாகி உள்ளனர்.
பூக்காத கத்தரி
தேக்கம்பட்டி ஊராட்சி காளியப்பனுாரில், பல விவசாயிகள், கத்தரி செடிகளை பயிர் செய்துள்ளனர். நன்கு வளர்ந்த நிலையிலும், இவற்றில் இருந்து பூ பூக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி முத்துசாமி கூறியதாவது: கத்தரி செடிகளை நடவு செய்து, நன்கு வளர்ந்துள்ளன. விதைகளை விற்பனை செய்தவரிடம் கேட்டபோது, மூன்று மாதங்களில் பூத்து, காய்க்கத் தொடங்கும் என்றார். ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும், செடிகள் மட்டும், நன்கு வந்துள்ளன. ஆனால் ஒரு செடி கூட, பூக்கவில்லை. இதுகுறித்து விதை விற்பனை செய்தவரிடம் கேட்டால், பல இடங்களில் காய்கள் காய்க்கவில்லை. அதனால் இச்செடியை வெட்டி அகற்றி விட்டு, புதிதாக நாற்று நடும் படி கூறுகின்றனர். ஒரு ஏக்கரில் கத்தரி நாற்று நடவு செய்தல், களையெடுத்தல், உரமிடுதல் (Compost) இப்படி பல்வேறு வேலைகளுக்கு, 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகி உள்ளது. இந்த செடிகளை மீண்டும் வெட்டி அகற்றுவதற்கும் கூலி கொடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் கோரிக்கை
விதை விற்பனை மற்றும் நாற்று விற்பனை தொடர்பாக, வேளாண் துறையினர் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற இழப்புகளையும், தரக்குறைவான விதை உற்பத்தியையும் தடுக்க முடியும். சம்பந்தப்பட்ட விதை உற்பத்தி நிறுவனத்தின் மீது, வேளாண் துறை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு (Compensation) பெற்றுத் தர வேண்டும், என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க
கொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
விளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்! இழப்பீடு வழங்க கோரிக்கை!